ஜாங்கிரி! மண்ணின் மைந்தர்களை ஒதுக்குவது ஏன்? தயாரிப்பாளர் நந்தினி கேள்வி

 

குணாளன் மணியம்

கோலாலம்பூர், நவ.14-
          இந்திய சினிமா படங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகிறார்கள். அது அவர்களின் உரிமை. ஆனால், மலேசிய மண்ணில் பிறந்த மண்ணின் மைந்தர்களை ஒதுக்குவது ஏன் என்று ஜாங்கிரி திரைப்படத்தின் தயாரிப்பாளர் நந்தினி கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
       சினிமா திரைப்படங்களுக்கு இரண்டு முதல் மூன்று வாரம் வரையில் திரையரங்குகளில் வாய்ப்பு வழங்கப்படும் வேளையில் மலேசிய திரைப்படங்களுக்கு மூன்று நாள் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுவது வேதனைக்குரிய விஷயமாகும் என்று மஇகா கலை,கலாச்சார பிரிவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நந்தினி தெரிவித்தார்.
             மலேசியாவில் திரைப்படம் தயாரித்து பணம் சம்பாதிக்க முடியாத நிலையில் ஆர்வம் காரணமாக திரைப்பட தயாரிப்புத் துறையில் ஈடுபடும் மண்ணின் மைந்தர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது என்கிறார் நந்தினி.
            ஜாங்கிரி திரைப்படத்திற்கு மலேசிய மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்து வருகிறது. ஆனால், படத்தை திரையேற்ற ஒரு சில திரையரங்க உரிமையாளர்கள் தயாராக இல்லை. தங்கள் விருப்பத்திற்கு நேரத்தை மாற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் மலேசியத் திரைப்படங்களுக்கு 3 நாட்களுக்கு மேல் வாய்ப்பு தர மறுக்கிறார்கள். இது குறித்து கேட்டால் படம் ஓடவில்லை என்கிறார்கள். மக்கள் படத்தை பார்க்கத் தயாராக இருக்கும் பட்சத்தில் மூன்று நாட்களுக்குள் படத்தை திரையரங்கில் இருந்து அகற்றி விட்டால் படத்திற்கு மக்கள் ஆதரவு எப்படி கிடைக்கும் என்று நந்தினி ஆதங்கப்பட்டார்.
          மலேசிய மண்ணில் பிறந்த நாங்கள் புறக்கணிக்கப்பட்டால் நாங்கள் எங்கே செல்வது என்று நந்தினி கேட்டார்.
          கடந்த வாரம் ஜாங்கிரி திரைப்படம் திரையேறிய போது இரவு காட்சிக்காக பலர் வந்திருந்தார்கள். ஆனால், இரவு காட்சி இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். சினிமா படம் போல் மக்கள் மலேசிய படங்களை விரைந்து பார்ப்பதில்லை. ஒரு வாரம் 10 நாட்களுக்குப் பிறகு படம் பார்க்க வருவார்கள். அவர்களுக்கு படம் பார்க்க வாய்ப்பு இல்லை என்றால் பார்க்கமாட்டார்கள். இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று நந்தினி பணிவோடு கேட்டுக் கொண்டார்.
           கடந்த நவம்பர் 9 முதல் திரையரங்கில் திரையேறி வரும் ஜாங்கிரி படத்தை நந்தினி தயாரிக்க கபிலன் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்குநர் சுகன் பஞ்சா சிறந்த படம் என்று பாராட்டியுள்ளார். மேலும் பலரும் ஜாங்கிரி படத்தை பாராட்டியுள்ளனர். மலேசியர்கள் ஜாங்கிரி படத்தை பார்க்க அழைக்கப்படுகிறார்கள்.

Comments