இந்திய சமுதாயத்தின் குரலாக மேலவையில் செயல்படுவேன்! செனட்டராக பதவி ஏற்ற டத்தோ டி.மோகன் உறுதி     குணாளன் மணியம்

கோலாலம்பூர், நவ.17-
          மேலவையில் இந்திய சமுதாயத்தின் குரலாக இருந்து செயல்படுவேன் என்று செனட்டராக நியமிக்கப்பட்ட ம இ கா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் வாக்குறுதியளித்துள்ளார்.
          இந்த செனட்டர் பதவி ஒரு முக்கியமான பதவி. இதுநாள் வரையில் இந்திய மக்களுக்காக ஊடகம் வழி  குரல் எழுப்பி வந்தேன். தற்போது வழங்கப்பட்டுள்ள செனட்டர் பதவியின் வழி மேலவையில் இந்திய சமுதாயத்தின் குரலாக செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொள்ளவிருப்பதாக நவம்பர் 16 புதன்கிழமை காலையில் செனட்டராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட டத்தோ டி.மோகன் தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் கூறினார்.
          கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் சேவையாற்றி வருகிறேன். கட்சியில் சாதாரண உறுப்பினராகச் சேர்ந்து தற்போது உதவித் தலைவர் நிலைக்கு உயர்ந்ததற்கு இந்திய மக்களுக்காக ஆற்றிய சேவைதான் காரணம் என்று மோகன் தெரிவித்தார்.
           இந்திய மக்கள் பிரச்சினைகள் குறித்து மேலவையில் கண்டிப்பாக குரல் எழுப்புவேன். அதற்கான தருணம் இப்போது கிடைத்துள்ளது. மேலும் இந்திய சமுதாய இளைஞர்களுக்கு தேவையான மேம்பாடுகளை கொண்டு வருவதற்கும் பாடுபடுவேன். மீபா, சுக்கிம் வழி இளைஞர்களுக்கு எப்போதும் ஊக்குவிப்பாக செயல்படவிருப்பதாக டத்தோ டி.மோகன் தேசம் வலைத்தளத்திடம் சொன்னார்.
          என் மீது நம்பிக்கை வைத்து இந்த செனட்டர் பதவி கிடைக்க வாய்ப்பு வழங்கிய பேரரசர், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் நேரில் வந்து வாழ்த்து சொன்ன துன் டாக்டர் சாமிவேலு, தோபுவான் இந்திராணி சாமவேலு, டத்தோஸ்ரீ வேள்பாரி, டத்தோஸ்ரீ தேவமணி, டத்தோ ம.கமலநாதன், டத்தோ எம்.சரவணன், டத்தோ சிவராஜ், தேசம் பத்திரிகை ஆசிரியர் குணாளன் மணியம், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கு டத்தோ டி.மோகன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
         இந்திய சமுதாயத்திற்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட சேவையின் பலனாகவே டத்தோ டி.மோகனுக்கு செனட்டர் பதவி கிடைத்துள்ளது.
         கடந்த 20 ஆண் டுகளுக்கு முன்பு ஒரு சாதாரண உறுப்பினராக  மஇகாவில் இணைந்து படிப்படியாக உயர்ந்து இளைஞர் பிரிவுத் தலைவராக பதவியேற்றார். மஇகாவில் இணைந்த காலம் தொட்டு மக்கள் சேவைக்கு முன் வைத்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இத்தகைய சேவைக்காக இந்த செனட்டர் பதவி கிடைத்துள்ளதாக மஇகா தலைவர்கள் பலர் குறிப்பிட்டனர்.   
      இந்திய சமுதாய போராட்டம் என்றாலே டி.மோகன்தான் என்ற பட்டப் பெயருக்கு சொந்தக்காரராக இருக்கும்   டத்தோ டி.மோகனுக்கு சரியான நேரத்தில் முறையான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த செனட்டர் பதவியின் வழி டத்தோ டி.மோகன் தொடர்ந்து மக்கள் சேவைக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comments