ஜாங்கிரிக்கு கைகொடுங்கள்! இளைஞர்களின் கனவை சிதைத்து விடாதீரகள்! -தயாரிப்பாளர் நந்தினி கோரிக்கை குணாளன் மணியம்கோலாலம்பூர் நவ.18-
            ஜாங்கிரி "திரைப்படம் எங்களின் நீண்ட நாளைய கனவு. அந்த கனவை நனவாக்கி விட்டோம். எங்களின் கனவை சிதைத்து விடாதீர்கள். திரையரங்கில் ஜாங்கிரிக்கு வாய்ப்பு வழங்குங்கள். இளைஞர்களின் கனவை சிதைத்து விடாதீர்கள்" என்று அதன் தயாரிப்பாளர் நந்தினி கணேசன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
          "நாங்கள் தொடர்ந்து திரைப்பட தயாரிப்பில் இருக்க வேண்டுமா என்பதை திரையரங்க உரிமையாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் தரமில்லாத படத்தை மக்களுக்குத் தரவில்லை. ஒரு தரமான படத்தை தந்திருக்கிறோம் என்பது ரசிகர்கள் வழங்கும் ஆதரவில் இருந்து தெரிகிறது. இப்படத்தை இன்னும் சில வாரங்களுக்கு திரையேற்றினால்தான் மக்களுக்கு இப்படத்தை காண வாய்ப்பு ஏற்படும். இல்லாவிட்டால் நாங்கள் இத்துறையில் இருந்து விலகிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று பூச்சோங் ஐஓஐ மாலில் மஇகா இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் கலை கலாச்சார பிரிவின் ஆதரவில் நடைபெற்ற சிறப்பு காட்சிக்கு பின்னர் தேசம் வலைத்தளத்திடம் நந்தினி அவ்வாறு சொன்னார்.
          நாடு தழுவிய நிலையில் ஜாங்கிரி நன்றாகத்தான் திரையேறிக் கொண்டிருக்கிறது. மக்கள் ஆதரவு நன்றாக உள்ளது. இப்படத்தை திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து திரேயேற்ற வேண்டும். நாங்கள் பினாங்கு, கெடா, பேரா, மலாக்கா, ஜொகூர் என்று ஜாங்கிரி கதாநாயகன் விக்ரன், நாயகி அகல்யா, இயக்குநர் கபிலன், புவனன், கர்ணன் உள்ளிட்ட குழுவோடு பட விளம்பரத்திற்காக பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் கனவு சிதைந்து விடக்கூடாது. திரையரங்க உரிமையாளர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நந்தினி கேட்டுக் கொண்டார்.
            மலேசிய மக்களே, சினிமா படங்கள் பார்ப்பது உங்களின் உரிமை. ஆனால், ஒரு முறை மலேசிய இளைஞர்களின் உழைப்பில் உதித்த ஜாங்கிரியை ஒருமுறை சென்று பாருங்களேன் என்று தேசம் வலைத்தள ஊடகம்   கைகூப்பி கேட்டுக் கொள்கிறது.

Comments