சமய போதகர் ஜாக்கிர் நாயக்கை நம்பிக்கை கூட்டணி ஆதரிக்கின்றதா?மு.வ.கலைமணி

பினாங்கு, நவ.30-
    இந்திய நாட்டை விட்டு வெளியேறி மலேசிய நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாக்கிர்
நாயக்கை தற்காத்து பேசியுள்ள அமானா கட்சியின் தகவல் பிரிவு தலைவர் காலீட் சாமாட்டிற்கு எதிராக பினாங்கு, பத்து கவான் தொகுதி ம.இ.கா தலைவர் சூ.இராமலிங்கம்  கண்டனம் தெரிவித்துள்ளார்.
     சர்ச்சைக்குரிய சமய போதகரை நம்பிக்கை கூட்டணியிலுள்ள இதர கட்சிகளும் தற்காக்கின்றதா? என அவர் கேள்வி எழுப்பினார்.
    தன்னுடைய ஆதரவாளர்களில் சிறு பகுதியினர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக ஜாக்கிர் நாயக் மீது குற்றம் சுமத்தக்கூடாது என காலீட் சாமாட் கூறியிருந்தது தொடர்பில்  அவர் மேற்கண்டவாறு கூறினார்.
    பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சிதைக்கும் வகையில் ஜாக்கிர் நாயக்கின் பேச்சும் நடவடிக்கையும் உள்ளது.
அவர் இந்து சமயத்தையும் இஸ்லாம் அல்லாதவர்களையும் இழிவு படுத்தும் வகையில் பேசியதற்கான பல ஆதாரங்கள் உள்ளன.
இவ்விவகாரம் தொடர்பில், ஜ.செ.க.விலுள்ள இந்திய தலைவர்களும் ஹிண்ராப்பும் காலீட் சாமாட்டிடம் விளக்கம் பெற வேண்டும்.
     அமானா கட்சி நம்பிக்கை கூட்டணியிலுள்ள ஓர் உறுப்பு கட்சியாகும். அக்கட்சியின் தகவல் பிரிவு தலைவர் இத்தகைய நிலைப்பாட்டை தெரிவித்திருப்பது அந்த பெரிய கூட்டணி பிரதிநிதியின் நிலைப்பாடாகவே தெரிகின்றது. ஜாக்கிர் நாயக் தனது சமய பிரச்சாரங்களில் மற்ற சமயங்களை பலமுறை இழிவுபடுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதன் காரணமாகவே, ம.இ.கா. இளைஞர் பிரிவு மற்றும்  அரசு சார்பற்ற இயக்கங்களுடன் இணைந்து ஜாக்கிர் நாயக்கின் சொற்பொழிவுகளுக்கு வலுவான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது.
ஜ.செ.க.விலுள்ள இந்திய தலைவர்களும்   மக்களுக்கு
விளக்கம் தர வேண்டும்.
நாட்டிற்குள் நுழைய விடக் கூடாது என்று போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியைச் சேர்ந்த இந்திய தலைவர்கள் இப்போது எங்கே போனார்கள்..?
எதற்காக மௌன சாமியார் வேடம் என அவர் வினா எழுப்பினார்.

Comments