"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு" திருக்குறள் வாசிப்போடு நாடாளுமன்ற மேலவையை அதிர வைத்தது டத்தோ டி.மோகன் குரல்!

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்லது அரசு"

திருக்குறள் வாசிப்போடு நாடாளுமன்ற மேலவையை அதிர வைத்தது டத்தோ டி.மோகன் குரல்!
கோலாலம்பூர், டிச. 7-    
     நாடாளுமன்ற மேலவையில் திருக்குறள் வாசிப்போடு மேலவையை அதிர வைத்தது டத்தோ டி.மோகன் குரல். பதவி உறுதிமொழி எடுக்கும் போது "வணக்கம்" என்று தமிழ்மொழியில் ஆரம்பித்து மலாய் மொழியில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்ட டத்தோ டி.மோகன் நாடாளுமன்றத்தில் தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
      இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் மஇகாவின் உதவித் தலைவரான செனட்டர் டத்தோ டி.மோகன் அவர்கள்
 நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்ட பிறகு தனது முதல் உரையாக  மேலவையில் 2018 ஆம் வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் பங்குகொண்டு பேசினார்.
தம்முடைய இந்த முதல் மேலவை உரையில் அவர் தம்மை மேலவை உறுப்பினராக தேர்வு செய்த மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களுக்கும்  மஇகாவின்  தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் அவர்களுக்கும்  நன்றி தெரிவித்தார்.
       அதன்பிறகு வள்ளுவரின் 385 ஆவது குறளான
"இயற்றலும் ஈட்டலும்  காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு"
என்பதற்கு ஏற்ப 2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் நலமான வாழ்க்கை மேம்பாட்டையும் உறுதி செய்கிறது என அவர் குறிப்பிட்டார்.
     இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கைகளில் இது தலையாய ‘தாய்’ பட்ஜெட் ஆகும்.  இது நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்துவதாகவும் மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதாகவும் உள்ளது என அவர் கூறினார்.
    மலேசிய மக்கள் அனைவருக்குமான இந்த அறிக்கை அனைத்து இனங்களும் பயன் பெறுவதை உறுதி செய்வதாக இருக்க வேண்டுமெனவும் அவர் தமது உரையில் கேட்டுக் கொண்டார்.
    நாடு, நாட்டு மக்கள், இளைஞர்களின்  மேம்பாடு, விளையாட்டுத்துறை, தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் மேம்பாடு குறித்தும் அவர் பேசினார்.
    இந்த ஆண்டு ஒதுக்கீடுகளின் வழி தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் சிறப்பான கட்டிட வசதிகளை கொண்டிருக்கும் எனவும்  டத்தோ டி. மோகன் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும்
இளையோருக்கான எஸ்எல்1எம் பயிற்சி திட்டத்தில் இதுவரை இனவாரியாக பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டுமெனவும் அவர்  கேட்டுக் கொண்டார்.
        நாட்டின் விளையாட்டுத் துறை மேம்பாட்டிற்கு இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சரும், துணையமைச்சரும் ஆற்றிவரும் பங்கை மேற்கோள்காட்டி பேசிய  அவர் பயிற்சியாளர்களின் திறனும், விளையாட்டு வசதிகளின் மேம்பாடும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
       இந்திய சமுதாய மாணவர்களிடையே சமுதாய சீர்கேட்டை களையும் நோக்கில் பள்ளிக்கூடங்களில் சமய வகுப்புகள் நடத்தப்பட்டால் இன்னும்  சிறப்பாக இருக்கும். இந்திய சமுதாய இளைஞர்கள் சிலரிடத்தில் இருக்கின்ற வன்முறை கலாச்சாரங்களை  முற்றிலுமாக ஒழிப்பதற்கு சமய வகுப்புகள் இன்றியமையாதது. இதனை அரசாங்கம் சீர் தூக்கி பார்க்க வேண்டுமென  டத்தோ டி.மோகன் தனதுரையில் மிக முக்கியமாக  வலியுறுத்தினார்.


Comments