டத்தோ டி.மோகன் கேள்வி கேட்க உரிமையுண்டு!கென்னத் ஈஸ்வரன் வாங்கிய ஒன்றரை லட்சம் வெள்ளிக்கு தொழிலாளர்கள் எங்கே? மிண்டாஸ் செயலாளர் குணசேகரன் கேள்வி

டத்தோ டி.மோகன் கேள்வி கேட்க உரிமையுண்டு!கென்னத் ஈஸ்வரன் வாங்கிய ஒன்றரை லட்சம் வெள்ளிக்கு தொழிலாளர்கள் எங்கே?
மிண்டாஸ் செயலாளர் குணசேகரன் கேள்வி

செய்தியாளர் : 
 குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜன. 28-
           இந்தியத் தொழிலாளர்களை தருவித்துத் தருவதாக வாக்குறுதி வழங்கியதோடு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை கட்டணமாக பெற்றுக் கொண்டுள்ள டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் அப்பணத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று மலேசிய இந்திய சிகையலங்கரிப்பாளர் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ராஜசேகரன் ராக்கப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.
          எங்களிடம்  வாங்கியப் பணத்திற்கு 3 ஆண்டுகளாக எந்த பதிலும் இல்லை. இந்தியத் தொழிலாளர்களும் வரவில்லை. நாங்கள் கேள்வி கேட்காமல் சும்மா இருக்க முடியாது.
எங்கள் நிலைமை இப்படியிருக்க அதற்கு விளக்கம் சொல்லாமல் தங்கள் தலைவரை தற்காத்துப் பேசியுள்ள மைக்கியின் நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் ஆர்.ராஜேந்திரன் உண்மை நிலையை ஆராய்ந்து பேச வேண்டும். உங்கள் தலைவர் வாங்கிய ஒன்றரை லட்சத்திற்கு பதில் சொல்லுங்கள். அதைவிடுத்து மைக்கித் தலைவரை தற்காத்து பேச வேண்டும் என்பதற்காக உண்மையை மூடி மறைக்கக் கூடாது என்று ராஜசேகர பதிலடி கொடுத்துள்ளார்.
        மலேசிய மேலவை உறுப்பினர் செனட்டர் டத்தோ டி.மோகன் எங்கள் தொழிலாளர் பிரச்சினைக்கு உதவ முன்வந்துள்ளார். அவரிடம் மைக்கித் தலைவர் வாங்கிய ஒன்றரை லட்சம் வெள்ளி குறித்து தகவல் தெரிவித்தோம். அவர் அது குறித்து கேள்வி எழுப்பினார். இதில் எந்தத் தவறும் இல்லை. டத்தோ டி.மோகனுக்கு மைக்கித் தலைவரை கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. இது பணவிவகாரம் என்பதை ராஜேந்திரன் மறந்நு விட வேண்டாம் என்றார் ராஜசேகரன்.
          நாங்கள் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரனால் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்கிறோம். காரணம் 3 ஆண்டுகளாக பணமும் வரவில்லை. தொழிலாளர்களும் வரவில்லை. கென்னத் ஈஸ்வரன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றாத தலைவரை யாராக இருந்தாலும் பதவி விலகத்தான் சொல்வார்கள் என்று ராஜசேகரன் சொன்னார்.
          போட்டி போட்டு தலைவராக இருக்கும் கென்னத் ஈஸ்வரனை கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்வதற்கு ராஜேந்திரன் யார்? மஇகாவுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கும்  கென்னத் ஈஸ்வரனும் மஇகாவை மட்டம் தட்டி பேசியிருக்கிறார் என்பதை மறந்துவிட வேண்டாம். டத்தோ டி.மோகன் எங்களை தற்காக்க வந்திருக்கிறார். அவரை உதாரணமாக எடுத்துக் கொண்டு கென்னத்துக்கு ஆதரவு வழங்க பூசி மொழுக வேண்டாம் ராஜேந்திரன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ராஜசேகரன் சாடினார்.

Comments