ஒருவர் ஒரு ஏழைக் குடும்பத்தைத் தத்தெடுத்துக் கொண்டால் நாட்டில் ஏழைகள் இருக்க மாட்டார்கள்! இவ்வாண்டில் 2,000 ஏழைக் குடும்பங்களுக்கு புரட்சிப் படை வழிகாட்டும்! ஸ்ரீ முருகன் கல்வி நிலைய தோற்றுநர் டான்ஸ்ரீ தம்பிராஜா நம்பிக்கை

ஒருவர் ஒரு ஏழைக் குடும்பத்தைத் தத்தெடுத்துக் கொண்டால் நாட்டில் ஏழைகள் இருக்க மாட்டார்கள்!
இவ்வாண்டில் 2,000 ஏழைக் குடும்பங்களுக்கு புரட்சிப் படை வழிகாட்டும்!
ஸ்ரீ முருகன் கல்வி நிலைய தோற்றுநர் டான்ஸ்ரீ தம்பிராஜா நம்பிக்கை

குணாளன் மணியம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 22-
           நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் இந்திய ஏழைக் குடும்பங்களை ஒருவருக்கு ஒருவர் என்று தத்தெடுத்துக் கொண்டால் ஏழை என்ற சொல்லுக்கே இடமிருக்காது.
அந்த வகையில் ஸ்ரீ முருகன் கல்வி் நிலையத்தின் புரட்சிப்படை இவ்வாண்டில் 2 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு வழிகாட்டும் என்று அதன் தோற்றுநர், தலைவர் டான்ஸ்ரீ தம்பிராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
       கடந்த 36 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தற்போது ஏழை குடும்பங்களில் இருக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் நடவடிக்கையை
மேற்கொண்டு வருகிறது.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் புரட்சிப்படைத் தலைவர் சிவபாலன் தலைமையில் ஏழை மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் எதிர்கால லட்சியங்களை நிறைவேற்றி வைக்க ஒரு வழிகாட்டல் உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் பெட்டாலிங் ஜெயா சென்டரில் நடைபெற்ற புரட்சிப்படை அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
       நாடு தழுவிய நிலையில் படிக்கத் துடிக்கும் ஏழை மாணவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இத்தகைய மாணவர்களுக்கு யார் வழிகாட்டுவது? இதனை புரட்சிப்படை கையிலேடுத்துள்ளது.
இதற்காக புரட்சிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் வேலையே ஏழை மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி வழங்குவதுதான்.
இவர்கள் படிக்கும் சூழலை மாற்றியமைப்பது, மாத வருமானத்திற்கு வழிகாட்டுவது, மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு நடத்துவது என்று பலவகையில் அவர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்க புரட்சிப்படை முழுமூச்சாக நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக டான்ஸ்ரீ தம்பிராஜா குறிப்பிட்டார்.
          இந்த நிகழ்ச்சியில் 1,500 வெள்ளிக்கும் குறைவான வருமானம் பெறும் 20 குடும்பங்களுக்கு புரட்சிப்படை தலா 500 வெள்ளி வழங்கி உதவியது. மேலும் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு அவரவர் துறைகளுக்கான சீருடையை அணிவித்து ஊக்கமளித்தார்கள். இதில் மருத்துவர், பிஸியோதெராப்பி, கணக்கியல் நிபுணர், நில ஆய்வாளர், காவல் துறை, விஞ்ஞானி என்று பல லட்சியங்களை மாணவர் கொண்டிருந்தனர்.
          இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் துணை இயக்குநர் பிரகாஷ்ராவ், பேரா மாநில காவல் துறையின்  முன்னாள் துணை இயக்குநர்   டத்தோ பரமசிவம், மகப்பேறு மருத்துவர் டாக்டர் புரவி, பெற்றோர்கள், மாணவர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

Comments