*பதவி விலகலை மறு பரிசீலனை செய்க!* *டத்தோ டி.மோகன் வேண்டுகோள்*

*பதவி விலகலை மறு பரிசீலனை செய்க!*
*டத்தோ டி.மோகன் வேண்டுகோள்*

*கோலாலம்பூர் மார்ச் 18-*
      எப்.ஏ.எம் தலைவர்  பொறுப்பிலிருந்து தாம் பதவி விலகுவதாக ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் அவர்கள் அறிவித்திருக்கும் முடிவினை மறு பரிசீலனை செய்ய வேண்டுமெனவும், அவர் பதவி ஏற்றுக்கொண்டது  முதல் மலேசிய கால்பந்துத்துறையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிஃபாவின் தலைவர் செனட்டர்  டத்தோ டி.மோகன் தெரிவித்துள்ளார்.
     இவரது முயற்சிகள் தூரநோக்கு சிந்தனையை தாங்கி பயணிக்கின்ற சூழலில் குறுகிய காலத்தில் நமது தரத்தினை மேம்படுத்த இயலாது. இந்த குறுகிய காலத்தில் சரியான தடத்தில் மலேசிய கால்பந்துத் துறையை இவர் அழைத்துச் செல்கின்ற நிலையில் இவரது பதவி விலகல் அறிவிப்பானது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
      நமது மலேசிய கால்பந்துத்துறையின் வளர்ச்சியை பொறுத்தமாட்டில் 16 வயதிற்கு அப்பால் ஓர் விளையாட்டாளரை அடையாளம் கண்டு மேம்படுத்தும் சூழல் உள்ளது. அப்படிப்பட்ட தருவாயில் தூரநோக்கு சிந்தனையோடு சிறு வயதில்
குறிப்பாக 7,8 வயதில் இருந்தே  விளையாட்டாளர் களுக்கான களத்தை அமைத்து  அவர்களுக்கான பயிற்சிகளை மேம்படுத்தினால் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள் நமது தரம் உயர்த்தப்படும் என்றார் அவர்.
    அதோடு முந்தைய காலங்களைப்போல் வங்கிகள், ஜி.எல்.ஜி நிறுவனங்கள் ஆகியவை கால்பந்துத்துறை வளர்ச்சி  சார்ந்த பயிற்சி மையங்களை அதிகப்படுத்தி அதனை முறையாக செயல்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
      மலேசிய கால்பந்துத்துறையின் வளர்ச்சி என்பது ஒருவர் கையில் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்தியமாகும்.அந்த வகையில் மலேசிய கால்பந்துத்துறையின் தரவரிசை குறைவுக்காக துங்கு இஸ்மாயில் பதவி விலக தேவையில்லை. இன்னும் பல நல்ல திட்டங்களை அவர்  மேம்படுத்தி மலேசியாவை கால்பந்துத்துறையில் முன்னெடுக்க வேண்டுமென டத்தோ டி.மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments