இந்தியர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வழங்கும் மானியம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா? வேதனையளிக்கிறது என்கிறார் சமுதாயத் தொண்டர் ரத்னவள்ளி அம்மையார்

இந்தியர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வழங்கும் மானியம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா?
வேதனையளிக்கிறது என்கிறார் சமுதாயத் தொண்டர் ரத்னவள்ளி அம்மையார்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 25-
         இந்தியர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வாரி வழங்கும் பணத்தை ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்தி வருவது வேதனையளிப்பதாக சமுதாயத் தொண்டர் மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் கூறியுள்ளார்.
         ஏழை மக்கள் குறிப்பாக இயக்கங்கள் வைத்து நடத்தும் நடுத்தர மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் வழங்கும் பணத்தை ஒரு சிலர் தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்வது எந்த வகையில் நியாயம்? நாட்டில் பல இயக்கங்கள் பணமில்லாமல் தவித்து வருவதை நான்  நேரடியாக பார்த்திருக்கிறேன். பல சமயங்களில் நான் என் சொந்தப் பணத்தை அள்ளி கொடுத்திருக்கிறேன். ஆனால், இங்கே பணமுள்ள ஒரு சிலர் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொந்த இயக்கத்திற்கு எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி செய்தால் அவர்கள் மீதும் அவர்கள் சார்ந்த கட்சி மீதும் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என்று தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய பிரத்தியேக செய்தியில் ரத்னவள்ளி அம்மையார் கேள்வி எழுப்பினார்.
         நான் எந்தப் பதவியிலும் இல்லை. எந்த பட்டமும் வைத்திருக்கவில்லை. ஆனால், இன்று வரையில் மக்களுக்கு  என் சொந்தப் பணத்தில் உதவி வருகிறேன். ஆனால், பதவியும் பட்டமும் உள்ள ஒரு சிலர் சொந்தப் பணத்திலும் உதவி செய்யவில்லை. அரசாங்கப் பணத்திலும் உதவி செய்யவில்லை. எனக்குத் தெரிந்து ஒரு இளைஞர் தன் எதிர்காலத்திற்காக ஒரு கட்சியின் படி ஏறி அழுத்து விட்டதை என்னிடம் கண்ணீரோடு சொன்னார். இன்னும் எத்தனை இளைஞர்கள் வெளியில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?
        அரசாங்கப் பணத்தை ஏன் அந்த இளைஞர்களுக்கு வழங்கக் கூடாது? இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கவனத்தில் கொள்ள வேண்டும். நான் யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. மாறாக ஏழை மக்களை கவனியுங்கள் என்றுதான் கேட்கிறேன். பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மக்கள் மீது கொண்டுள்ள அன்பையும் அக்கறையையும் ஒரு சிலர் களங்கப்படுத்தக் கூடாது என்று ரத்னவள்ளி அம்மையார் கேட்டுக் கொண்டார்.
          கடந்த 20 ஆண்டுகளாகத் தன் சொந்தப் பணத்தில் மக்கள் சேவையாற்றி வரும் ரத்னவள்ளி அம்மையார் இதுவரை லட்சக்கணக்கில் பணத்தை அள்ளித் தந்திருக்கிறார். அதேநேரத்தில் கலைஞர்களின் காவலராகவும் இருந்து கொண்டு கலைஞர்களுக்கு பணத்தை அள்ளித் தந்திருக்கிறார். ஒரு சில அரசியல் தலைவர்கள்கூட அப்படி பணத்தை அள்ளித் தந்திருப்பார்களா என்பது கேள்விக் குறியே!

Comments