*மிஃபாவின் நிர்வாகம் வெளிப்படையானது விளக்கம் அளிக்க நாங்கள் தயார்?* *சிவகுமாருக்கு டத்தோ டி.மோகன் பதில்*

*மிஃபாவின் நிர்வாகம் வெளிப்படையானது விளக்கம் அளிக்க நாங்கள் தயார்?* 
 *சிவகுமாருக்கு டத்தோ டி.மோகன் பதில்*

கோலாலம்பூர், மார்ச் 25-
    மலேசிய இந்திய இளைஞர்களுக்கு  காற்பந்துத் துறையின் வழி பொருளாதாரத்தை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதே மிஃபாவின் நோக்கம். அந்த நோக்கம் அறியாது பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர்  சிவக்குமார் மிஃபா குறித்து  பிதற்றியிருப்பது கேலிக்குரியதாக உள்ளது. எங்களது நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகின்றது. நான் பல முறை குறிப்பிட்டுள்ளதைப்போல எங்களின் நிலை குறித்தும், நாங்கள் எதிர்நோக்கி வரும் சிரமங்கள் குறித்தும், எங்களின் சாதனை  குறித்தும்  விளக்கம் அளிக்க நாங்கள் தயார்! மிஃபா அலுவலகத்திற்கு வருகை அளிக்க சிவக்குமார் தயாரா? என்று  மிஃபாவின் தலைவரும், செனட்டருமான டத்தோ டி.மோகன் கேட்டுள்ளார்.
     செடிக் மானியங்கள் குறித்து கேள்வி எழுப்பியதை நான்  தவறு என்று சுட்டிக்காட்டவில்லை. ஆனால் மிஃபாவின் மீது தவறான கண்ணோட்டத்தை தாங்கிய கருத்துக்கள் வருத்தம் அளிக்கிறது. மிஃபாவிற்கு அரசாங்கம் வாரி வாரி வழங்கவில்லை. செடிக் மூலம் வழங்கப்பட்ட மானியம் முழுக்க முழுக்க இந்திய இளம் விளையாட்டாளர்களை உருவாக்கும் பயிற்சிகளுக்கு செலவிடப்பட்டது என்றார் அவர்.
     நாடு தழுவிய அளவில் 37 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு கிட்டதட்ட 2000-க்கும் மேற்பட்ட இந்திய இளம் விளையாட்டாளர்களுக்கு இலவச கால்பந்து பயிற்சி அளிக்கப்பட்டது. காற்பந்துத்துறை மிகப்பெரியது அந்த வகையில்  அதில் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய அடைவு நிலையை எட்டலாம் என்ற அடிப்படையில் நமது மாணவர்களுக்கு இளம் வயதில் இருந்தே காற்பந்து பயிற்சிகளை அளித்து அவர்களை தலை சிறந்த விளையாட்டாளர்களாக உருவாக்கவே மிஃபா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
2014, 2015 ஆம் ஆண்டுகளில் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்களின் முயற்சியில் அரசாங்கத்தின் வழி 5 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு செடிக் மூலம்  2.602 மில்லியன் மிஃபா பயிற்சி முகாம்களுக்கு கொடுக்கப்பட்டது. 2017ம் ஆண்டு எந்த நிதியும் இல்லாத நிலையில் 2018ம் ஆண்டு செடிக் வழி 6 லட்சத்து 39,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தான் மிஃபாவிற்கு அரசாங்கத்தின் வழி கிடைத்த நிதி.
மற்றபடி மிஃபா பிரிமியர் லீக், பிரசிடெண்ட் அணிகளுக்கான செலவுத் தொகைக்கான நன்கொடைகள் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், டத்தோஶ்ரீ எம்.சரவணன், நன்கொடையாளர்கள், பொதுமக்கள் என பல நல்லுள்ளங்களின் ஆதரவில் கிடைக்கப்பெற்று வருகின்றன. மிஃபாவின் வெற்றிக்கு பின்னால் பலர்  துணை நிற்கிறார்கள் என்பது மட்டும் தான் உண்மை.
 பிரிமியல் லீக் ஆட்டங்களை பொறுத்த வரையில் நாம் இதில் நிலைத்திருக்கவும், பலம் பொருந்திய அணியாக வலம் வரவும் 4 வெளிநாட்டு ஆட்டக்காரர்கள் அவசியம். 22 இந்திய இளம் விளையாட்டாளர்களும், 4 மலாய் ஆட்டக்காரர்களும் நமது அணியில் இடம் பெற்றுள்ளார்கள். இவர்கள் 3,000 முதல் 1,5000 வெள்ளி வரையில் சம்பளம் பெறுகிறார்கள். நமது அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடி  மாற்று அணிக்கு செல்பவர்களுக்கு நமது அணியை விட அதிகமான சம்பளம் வழங்கப்படுகிறது.
பயிற்றுநர்கள், மிஃபா நிர்வாகத்தினர் என பல குடும்பங்கள் மிஃபாவின் வழி முன்னேற்றப்பாதையில் பயணி வருகிறார்கள். பிரசிடெண்ட் கிண்ணப்போட்டிகளில் 20 இந்திய இளம் வீரர்கள், 4 மலாய் வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக மிஃபா அணி பல இடையூறுகளுக்கு மத்தியில் தனது நோக்கத்திலிருந்து விலகாது செயல்பட்டு வருகின்றது. இம்மாதிரியாக மிஃபா  குறித்து எதுவுமே அறியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் சிவக்குமார் பேசி வருவது நண்டுக்கதைக்கு ஒப்பானது. சமுதாயம் முன்னேற்றம் காண ஒத்துழைக்காமல், இடையூறு செய்வது போல இவரின் செயல் அமைந்துள்ளது. மிஃபாவின் செயல்பாடுகளை குறை சொல்லும் இவர் செய்த தனிப்பட்ட சாதனையை சொல்ல முடியுமா? என அவர் வினவினார்.
 இவரைப்போன்ற ஆட்களெல்லாம் அரசியல் லாபத்திற்காக குறை சொல்லிக்கொண்டே இருப்ப்பார்கள்.
 ஆகவே யாருக்கெல்லாம் மிஃபா குறித்து தெரியவில்லையோ, அது சார்ந்து ஏதேனும் தவறான கண்ணோட்டம் இருக்கின்றதோ?  தாராளமாக முன்னறிவிப்பு செய்து விட்டு  மிஃபா அலுவலகத்திற்கு வருகை புரிந்து தங்களது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம். அதனை விடுத்து தேவையில்லாமல் உண்மை அறியாமல்  பிதற்ற வேண்டாம்.
உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும். மிஃபா அணிக்காக மாதம் மாதம் 500 வெள்ளி முதல் 1000 வெள்ளி வரையில் நன்கொடை அளிப்பவர்களும் இருக்கிறார்காள். ஆகவே மிஃபா குறித்த தவறான கருத்தினால் எங்களுக்கு அரசாங்கம் அள்ளி கொடுப்பது போல மற்றவர்களுக்கு தோற்றமளிக்கிறது.
 மிஃபா அணியை வழிநடத்த நாங்கள் படும் கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். ஒரு வேளை சிவகுமார் உள்ளிட்ட எதிர்கட்சி இந்தியர்கள் மிஃபா அணியை திறம்பட வழி நடத்த தயாராக இருந்தால் அதற்கு வழிவிடவும் நாங்கள் தயார்  என டத்தோ டி.மோகன் தனது பத்திரிக்கை அறிக்கை வாயிலாக   தெரிவித்துள்ளார்.

Comments