துபாயில் திடீர் மரணமடைந்த தங்கரத்தினத்தின் உடலைக் கொண்டு வர போராட்டம்! மஇகா சேவை மையம் உதவுவதில் இழுத்தடிப்பு! மனைவி கெர்துருட் தவிப்பு! டத்தோ மலர்விழி குணசீலன் சடலத்தை கொண்டு வர முயற்சி

துபாயில் திடீர் மரணமடைந்த தங்கரத்தினத்தின் உடலைக்  கொண்டு வர போராட்டம்!
மஇகா சேவை மையம் உதவுவதில் இழுத்தடிப்பு!
மனைவி கெர்துருட் தவிப்பு!
டத்தோ மலர்விழி குணசீலன் சடலத்தை கொண்டு வர முயற்சி

செய்தியாளர் :
 குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 20-
           துபாய் அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு திடீர் மரணமடைந்த மலேசியாவைச் சேர்ந்த தங்கரத்தினம் தியாகராஜன் (வயது 53) என்பவரின் உடலை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு மஇகா மக்கள் சேவை மையம் அலட்சியம் காட்டி வருவது தொடர்பில் அவரது மனைவி கெர்துருட் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக மலேசிய மக்கள் சேவை மையத்தின் தலைவர் டத்தோ பி.மலர்விழி குணசீலன் கூறினார்.
        வெளிநாடுகளில் மரணமடைந்த பலரது உடல்கள் பிரச்சினையின்றி கொண்டு வரப்படுகின்றன. தங்கரத்தினம் என்ன பாவம் செய்தார்? கடந்த 44 நாட்களாக அவரது உடல் துபாய் மருத்துவமனை சவக்கிடங்கில் அல்லல்பட்டு வருவதாக செய்தியாளர் சந்திப்பில் டத்தோ மலர்விழி குணசீலன் தெரிவித்தார்.
         துபாய் நாட்டிற்கு வர்த்தக விஷயமாக கடந்த 8 மாத்த்திற்கு முன்பு சென்ற தன் கணவர் மூளை பிரச்சினை தொடர்பில் துபாய் அரசாங்க மருத்துவமனையில் ஜனவரி 12ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பிப்ரவரி 5ஆம் தேதி மரணமடைந்தார். தன் கணவரின் சடலத்தை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் அவர்களை சந்திக்க முயற்சி மேற்கொண்டேன். ஆனால், மஇகா சேவை மையம் அவரை பார்க்க விடவில்லை. மாறாக கோப்புகளை மட்டும் வாங்கிக் கொண்டு இன்று வரையில் அலைக்கழித்து வருவதாக தங்கரத்தினத்தின் மனைவி கெர்துருட் சொன்னார்.
          நான் சுகாதார அமைச்சர் என்ற நிலையில் டாக்டர் சுப்பிரமணியத்தை சந்திக்க விரும்பினேன். அப்படியே அவரை பார்க்கவிடவில்லை என்றாலும் மஇகா சேவை மையம் இப்பிரச்சுனைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், நான் சேவை மையத்திற்கு சென்றது முதல் இன்று வரையில் எந்தத் தீர்வும் இல்லை என்று கெர்துருட் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
            துபாய் ரஷிட் அரசாங்க மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் உடலை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு மருத்துவ சிகிச்சை கட்டணம் ஒரு லட்சத்து 12 ஆயிரம் வெள்ளி செலுத்த வேண்டும். அதேநேரத்தில் உடலை விமான மூலம் மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு 20 ஆயிரம் வெள்ளி் தேவைப்படுவதாக டத்தோ மலர்விழி குணசீலன் குறிப்பிட்டார்.
         இந்த விவகாரம் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பார்வைக்கு கொண்டு செல்லப்படவில்லை. அதேநேரத்தில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஹாஹிட் ஹமிடி பார்வைக்கும் கொண்டுச் சொல்லப்படவில்லை. இதுகுறித்து தெரிந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொண்டிருப்பார்கள். ஆனால், இதுகுறித்து யாரும் நடவடிக்கை மேற்கொள்ளாதது வருத்தமளிக்கிறது. எனினும் நாமும் முயற்சி செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் துபாயில் இருந்து உடலைக் கொண்டு வருவதற்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக டத்தோ மலர்விழி குணசீலன் தெரிவித்தார்.
       துபாய் மருத்துவமனையில் இருக்கும் தங்கரத்தினத்தின் உடலை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு மலேசிய மக்கள் சேவை மையம் நிதி திரட்டத் தொடங்கியுள்ளது. இதற்காக 2 ஆயிரம் வெள்ளி நிதி வழங்கி தொடக்கி வைப்பதாக டத்தோ மலர்விழி குணசீலன் சொன்னார்.
              கெர்துருட் கணவர் உடலை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு நிதி வழங்க விரும்பும் மக்கள் கீழ்க்காணும் வங்கி கணக்கில் நிதியை ஏப்ரல் 4ஆம் தேதிக்குள் சேர்ப்பிக்கும்படி டத்தோ மலர்விழி குணசீலன் கேட்டுக் கொண்டார். தொடர்புக்கு -017-5078705
PERTUBUHAN PERKHIDMATAN RAKYAT MALAYSIA
RHB BANK 21440000023866

Comments