எஸ்.பி.எம் மாணவர்கள் ஆலோசனை பெற்று மேல்படிப்பை திட்டமிட வேண்டும்! சுபாங் தொகுதி இந்தியர் நல இயக்குநர் பிரகாஷ்ராவ் ஆலோசனை!

எஸ்.பி.எம் மாணவர்கள் ஆலோசனை பெற்று மேல்படிப்பை திட்டமிட வேண்டும்!
சுபாங் தொகுதி இந்தியர் நல இயக்குநர் பிரகாஷ்ராவ் ஆலோசனை!

குணாளன் மணியம்
சுங்கை பூலோ, மார்ச் 20-
       எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள் திருவேங்கடம் போன்ற கல்விமான்களிடம் ஆலோசனைப் பெற்று மேல்படிப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று சுபாங் தொகுதி இந்தியர் நல இயக்குநர் திரு.பிரகாஷ்ராவ் ஆலோசனை கூறியுள்ளார்.
          இந்திய மாணவர்கள் குறிப்பாக சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் மருத்துவத் துறையில் படிக்கவே விருப்பம் கொள்கின்றனர்.
இது தவறல்ல. ஆனால், படிப்புக்கு போதிய பணமில்லாமல் தவிக்க வேண்டிய சூழல் அம்மாணவர்களுக்கு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கல்விமான்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் மலேசியத்
தனித்திறன் கழகத்தின் ஏற்பாட்டில் எஸ்.பி.எம் மாணவர்களுக்கான உயர்கல்வி உபகாரச்சம்பள வழி காட்டி கருத்தரங்கில்  உரையாற்றுகையில் பிரகாஷ்ராவ் தெரிவித்தார்.
          சுபாங் தொகுதியைச் சேர்ந்த நமது இந்திய மாணவர்கள் பலர் எஸ்.பி.எம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இத்தகைய மாணவர்கள் நன்கு ஆலோசனைப் பெற்று உயர்கல்வியை திட்டமிட வேண்டும் என்று பிரகாஷ்ராவ் சொன்னார்.
     இந்த நிகழ்வில் பெட்டாலிங் ஜெயா சுல்தான் அப்துல் சமாட் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த வினோத் தமிழரசன் 11ஏ, சுபாங் பெஸ்தாரி இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த அருந்ததி தாசன் 10ஏவும், புக்கிட் பிந்தாங் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த விஷ்ணுவர்த்தன் 9ஏவும்,  பண்டார் பாரு சுங்கை பூலோ இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த சஞ்சய் மோகன் 9ஏவும் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
இவர்கள் சுபாங் தொகுதியைச் சேர்ந்த மாணவர்களாவர்.  உயர்கல்வி குறித்து நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்ட இவர்கள் எதிர்கால கல்வியை சரியாகத் திட்டமிட முடியும் என்று பிரகாஷ்ராவ் குறிப்பிட்டார்.
         இந்த நிகழ்வில் எஸ்.பி.எம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மேற்கண்ட மாணவர்களுக்கு 2 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள மடிக்கணினி சுபாங் மஇகா தொகுதியின் சார்பில் மார்ச் 25ஆம் நாள் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் வழங்கப்படும் என்று பிரகாஷ்ராவ் அறிவித்தார்.
           இந்த நிகழ்ச்சியில் சுபாங் தொகுதி மஇகா தலைவர் சௌந்தராஜன், திருவேங்கடம், புஷ்பநாதன், ஆசிரியர் தமிழ்வாணி ஆகியோருடன் சுமார் 30 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Comments