புக்கிட் ஜாலில் அரங்கில் சிலாங்கூர் சுக்கிம் விளையாட்டாளர்கள் தேர்வு! 500க்கும் மேற்பட்ட இந்திய விளையாட்டாளர்கள் குவிந்தனர்

புக்கிட் ஜாலில் அரங்கில்  சிலாங்கூர் சுக்கிம் விளையாட்டாளர்கள் தேர்வு!
500க்கும் மேற்பட்ட இந்திய விளையாட்டாளர்கள் குவிந்தனர்

புக்கிட் ஜாலில், ஏப்ரல் 21-
       இந்திய சமுதாய விளையாட்டுத் துறையின் கடந்த கால வரலாற்றை மீட்டெடுக்கும் வண்ணம் உருவான சுக்கிம் (மலேசிய இந்தியர் விளையாட்டுப் போட்டிகள்) படிப்படியாக மெருகேறி இந்த வருடம் 5ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.
இந்த வருடம் சுக்கிம் 2018 போட்டிகளை சிலாங்கூர் சுக்கிம் ஏற்று நடத்துகின்ற நிலையில் அந்த அணிக்கான விளையாட்டாளர்கள் தேர்வு புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்றதாக அதன் தலைவர் இந்திரன் தங்கராசு தெரிவித்தார்.
      கால்பந்து, கபடி, தேக்குவண்டோ,ஓட்டப்போட்டிகளுக்கான தேர்வு வெள்ளிக்கிழமை முடிவுற்ற நிலையில் சனிக்கிழமை சிலம்பத்திற்கான  தேர்வு நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
      இந்த வருடம் சுக்கிம் 2018 போட்டிகள் வருகின்ற ஜூலை மாதம் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை யூ.பி.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கிறது.
12 மாநிலங்களை பிரதிநிதித்து கிட்டதட்ட  3000 -க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் 11 போட்டிகளில் முறையே கால்பந்து, கபடி, டென்னிஸ், தேக்குவண்டோ, சிலம்பம், பேட்மிண்டன், கராத்தே, ஓட்டப்போட்டிகள்,  ஸ்குவாஷ், ஹாக்கி, உடற்கட்டழகு போட்டிகள் ஆகியவற்றில்   கலந்து கொள்வார்கள் என  அவர் நம்பிக்கை சொன்னார்.
      மலேசிய இந்திய விளையாட்டு கலாச்சார அறவாரியத்தின் வழி டத்தோ டி.மோகன் அவர்களின் முயற்சியில் சுக்கிம் உருவானதிலிருந்து இந்திய சமுதாய விளையாட்டாளர்களுக்கான சிறந்த களம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வழி சமுதாயத்தை பிரதிநிதித்து தலைசிறந்த வீரர்கள் உருவாக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.
     சுக்கிம் பொறுத்தவரையில் ஒளிந்துகிடக்கும் இந்திய விளையாட்டாளர்களுக்கு வாய்ப்பினை உருவாக்கவும், விளையாட்டுத்துறை சார்ந்த ஊக்கத்தை ஏற்படுத்தவும் முனைப்பு காட்டுகிறது. சுக்கிம் சுக்மாவின் முன்னோட்டமாகவும் நடத்தப்படுகிறது.
    சிலாங்கூர் சுக்கிம் விளையாட்டாளர்கள் தேர்வில் மலேசிய இந்திய விளையாட்டு கலாச்சார அறவாரியத் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன், காற்பந்து ஜாம்பவான் டத்தோ சந்தோக் சிங், பயிற்றுநர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Comments