இந்திய இளைஞர்கள் மத்தியில் யோகக் கலை சென்று சேர்க்கப்பட வேண்டும்! டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்து

இந்திய இளைஞர்கள் மத்தியில் யோகக் கலை சென்று சேர்க்கப்பட வேண்டும்!
டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்து


குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 7-   
       இந்திய இளைஞர்கள் மத்தியில் யோகக் கலை கொண்டு சேர்க்கப்பட வேண்டும். நமது பாரம்பரிய கலையை நாம்தான் நமது சமுதாயத்திடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று இளைஞர், விளையாட்டுத் துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.
         யோகக் கலையில் இந்திய இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். இக்கலை இந்தியாவில் இருந்து அறிமுகமாகியிருந்தாலும்  அனைத்து இனத்தவர்களும் இதில் ஈடுபாடு கொண்டுள்ளனர்.
இக்கலை இந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கு சமுதாய பிரதிநிதிகள் முன்வர வேண்டும் என்று கோலாலம்பூரில் 2017 ஆசிய, உலக யோகா விருது விழாவில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவ்வாறு தெரிவித்தார்.
      நமது முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ட அரும் பெரும் கலை, யோகக்கலை. மனதை ஒரு  நிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சியே யோகாசனம். ஐம்புலன்களை அடக்கி ஆள்வது மனம். மனதை அடக்கி ஆள யோகாசனம் நமக்கு துணைபுரிகிறது.
      யோகக் கலை, உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளித்து நமது மன வலிமையை மேம்படுத்துகிறது. சிறார்கள் மட்டுமல்லாது, யோகசனப் பயிற்சி எல்லா வயதினருக்கும் ஏற்றதாகும் என்று டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.
        உடலின் உறுப்புகளுக்கு பயிற்சியளிக்கும் வகையில் உள்ள யோகா ஆசனங்களை செய்வதன் மூலம் உடல் நலம் சார்ந்த நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. உள்ளுறுப்புகள் நன்கு இயங்குவதோடு ஆரோக்கியம் மேம்படுகிறது. இந்தியர்கள் தவிர்த்து சீனர்கள் மத்தியிலும் மேலை நாடுகளிலும் நமது பாரம்பரிய யோகா வாழ்வியல் கலை மிகவும் வேகமாக பரவி வருகிறது.
சித்தர்கள் தங்களது அனுபவங்களினால் கண்டறிந்து கூறிய யோகாசன முறைகளை மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கூட ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எல்லாருக்கும் ஏற்புடைய யோகாசன
பயிற்சி முறைகள் மனித வாழ்கையை மேம்படுத்த வல்லது. அப் பயிற்சிகளை சரிவர செய்வதால்,  மனதை சீர்படுத்தி மன வலிமைப் பெற்று நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியத்தையும் பெற இயலும் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் குறிப்பிட்டார்.
     கோலாலம்பூர், ம.இ.கா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற இந்த யோகா விருது விழா நிகழ்ச்சியை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றி விருதுகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments