*பத்து கவான் நாடாளுமன்ற தொகுதி பரிமாற்ற விவகாரம்.* *கெராகான் இந்திய உறுப்பினர்கள் கொந்தளிப்பு.* *ம.இ.காவினர் அதிருப்தி!*

*பத்து கவான் நாடாளுமன்ற தொகுதி பரிமாற்ற விவகாரம்.*
*கெராகான் இந்திய உறுப்பினர்கள் கொந்தளிப்பு.*
*ம.இ.காவினர் அதிருப்தி!*


பினாங்கு, ஏப்.3-
     பத்து கவான் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த மூன்று மாத காலமாக சிறந்த சேவையாற்றி வந்த தலைநகரைச் சேர்ந்த கெராகான் கட்சியின்  மேல்மட்ட தலைவர்களில் ஒருவரான டத்தோ ஜெயந்திக்கு  வாய்ப்பு வழங்கப்படாது போகுமேயானால் இது ஒரு பெருத்த ஏமாற்றமாக அமையும் என பத்து கவான் தொகுதியைச் சேர்ந்த கெராகான் இந்திய உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
      கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக இன பேதமின்றி எல்லா மக்களுடனும் சகஜமாக பழகி வந்ததோடு, வாக்காளர்களின் அபிமானத்தையும் பெற்று நம்பிக்கை நட்சத்திரமாக டத்தோ ஜெயந்தி திகழ்ந்தார் என அக்கட்சியின் நீண்ட கால உறுப்பினரும், தொகுதியின் உதவித் தலைவருமான இ.தண்டாயுதபாணி ( மணி) சொன்னாார்.
        ம.சீ.ச இத்தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், கெராகான் வேட்பாளர் குளுகோர் நாடாளுமன்ற தொகுதிக்கு மாற்றம் பெற தேசிய முன்னணி தலைமை எடுத்த முடிவினால் இப்பிரச்சனை உருவாகி இருப்பதாக நம்பப்படுகிறது.
     டத்தோ ஜெயந்தியின் அயராத சேவையை மக்கள் உணர்ந்துள்ளதாகவும், அதனையொட்டி அவரை வெற்றியடைய செய்ய, தொகுதி ம.இ.காவினர் களத்தில் இறங்கி செயல்படும் வேளையில் இப்படியொரு செய்தி தம்மை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக பத்து கவான் தொகுதி ம.இ.கா தலைவர் சூ.இராமலிங்கம் கவலை தெரிவித்தார்.
     தொகுதி பரிமாற்றம் எற்படும்போது மாற்று தொகுதியையாவது  டத்தோ ஜெயந்திக்கு வழங்கியிருக்கலாம் என  தொகுதி இந்திய வாக்காளர்களில் பலர்,  தேசம் வலைத்தள ஊடகத்திடம் குறிப்பிட்டனர்.
       நாடு தழுவிய அளவில் கெராக்கான் கட்சியில் இந்திய வாக்காளர்கள் இருப்பதால், இப்பிரச்சனை ஒரு பூகம்பமாக வெடிக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டனர்.

Comments