பினாங்கில் தேசிய முன்னணி ஆட்சியமைத்தால் இந்து அறப்பணி வாரியம் கையடக்கம் செய்துள்ள ஆலயங்கள் அனைத்தும் இந்து மக்களிடமே ஒப்படைக்கப்படும்! டாக்டர் சுப்ரா வாக்குறுதி

பினாங்கில் தேசிய முன்னணி  ஆட்சியமைத்தால் இந்து அறப்பணி வாரியம் கையடக்கம் செய்துள்ள ஆலயங்கள் அனைத்தும் இந்து மக்களிடமே ஒப்படைக்கப்படும்!
டாக்டர் சுப்ரா வாக்குறுதி

பிறை, ஏப்ரல் 20-
      பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தை தேசிய முன்னணி கைப்பற்றுமேயானால்,பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கையடக்கம் செய்துள்ள பல ஆலயங்கள், இடுகாடுகள் மீண்டும் பொது மக்களிடமே ஒப்படைக்க ஆவன செய்யப்படும் என்று ம.இ.காவின் தேசியத் தலைவரும் சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
      பிறை, பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதி மக்களை சந்தித்த அவர் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.
     பினாங்கு மாநில தேசிய முன்னணியின் கொள்கை அறிக்கையில் இத்திட்டமும்  முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
       கடந்த 10 ஆண்டுகளாக  டி.எ.பி ஆட்சி நடத்தி வந்துள்ள போதிலும் இந்தியர்களுக்கான சலுகைகள் ஏதும் வழங்கப்படவில்லையென  இந்திய மக்கள் குறைப்பட்டுக் கொள்வதை நாம் அறிந்தே வந்துள்ளோம்.
மக்களை சிறப்பாக வழிநடத்த வேண்டிய மாநில அரசு பல சிரமங்களை இந்திய மக்களுக்கு தொடர்ந்து கொடுத்து வருகின்றது.
அந்த வகையில் ஆலயங்கள், இடுகாடுகள், பள்ளிக்கு வழங்கிய நிலங்களை இந்து அறப்பணி வாரியம் தனது சொத்தாக கையடக்கம் செய்துள்ளது குறித்து  பல புகார்களையும் பெற்று வரும் வேளையில்,  நீதிமன்ற வழக்குகளையும் அறப்பணி  வாரியம் எதிர்நோக்கி வருகிறது என்ற அவர் ஆட்சியை தேசிய முன்னணி கைப்பற்றினால் உடனடியாக  அவ்வாலயங்களை பொதுமக்களிடமே  ஓப்படைக்கப்படும் என்று திரளான மக்கள் கலந்துக் கொண்ட தேர்தல் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார்.
       மாநில ம.இ.கா தலைவர் டத்தோ க.தங்கவேலு, துணைத்தலைவர் டத்தோ மு.ஞானசேகரன், பாகான் டாலாம் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் ஜே.தினகரன், பிறை சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் மு.சுரேஷ், மாநில, தொகுதிப் பொறுப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.

Comments