செடிக்கில் மானியம் பெற்றவர்கள் பட்டியலை வெளியிட மறுப்பது ஏன்?டத்தோஸ்ரீ தேவமணி எதை மூடி மறைக்க முயல்கிறார்? பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் கேள்வி

செடிக்கில் மானியம் பெற்றவர்கள் பட்டியலை வெளியிட மறுப்பது ஏன்?டத்தோஸ்ரீ தேவமணி எதை மூடி மறைக்க முயல்கிறார்?
பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் கேள்வி

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்.4-
         செடிக்கில் மானியம் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிட மறுக்கும் பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி எதை மூடி மறைக்க முயல்கிறார் என்று
பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
          மிபா, சக்தி பக்தி, பவர் மலேசியா ஆகியவற்றுக்கு எவ்வளவு மானியம் வழங்கப்பட்டது என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்லவில்லை.
அதேநேரத்தில் செடிக் குறித்த கேள்விக்கு அறவே பதில் இல்லை. மேலும் சம்பந்தப்பட்ட சிலருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் அதனை பொதுவில் வெளியிட முடியாது என்று கூறியுள்ள தேவமணி எதையோ மூடி மறைக்க முயல்வதாக நாங்கள் சந்தேஐம் கொண்டதன் காரணமாகவே காவல் துறையில் புகார் செய்ததாக நாடாளுமன்றத்தில் மிபா தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் அவர்களிடம் விளக்கம் பெற்ற பிறகு சிவகுமார் செய்தியாளர்களிடம் அவ்வாறு சொன்னார்.
           செடிக் வழி இதுவரை 5 லட்சம் இந்தியர்கள் பலனடைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் பதில் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் நாலு பேரில் ஒருவர் பலனடைந்திருக்க வேண்டும்.

  • ஆனால், பொதுவில் மக்களிடம்  கேட்டால் யாரும் மானியம் பெற்றதாக தெரியவில்லை. அப்படியானால் செடிக் மானியம் யாருக்கு வழங்கப்படுகிறது? மிபா, சக்தி பக்தி, பவர் மலேசியா உள்ளிட்ட சில குறிப்பிட்ட அமைப்புகளுக்கு பெரும் தொகை வழங்கப்பட்டுள்ளதால் நாங்கள் கேள்வி கேட்கிறோம். இதற்கு பொறுப்பான துணையமைச்சராக இருக்கும் டத்தோஸ்ரீ தேவமணி பதில் சொல்லியிருக்க வேண்டும்.

    ஆனால், அவர் முறையாக பதில் சொல்லவில்லை. செடிக்கில் இருந்து இவ்வளவு தொகை இவர் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று சொல்வதில் என்ன பிரச்சினை? அதனை விவரித்து கூற முடியாது என்று கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று சிவகுமார் சொன்னார்.
        டத்தோஸ்ரீ தேவமணி இப்படி செய்வதால் மஇகாவின் பெயர்தான் களங்கப்படுகிறது. இதுகுறித்து மிபா தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் நோக்கம் மிபாவை வீழ்த்துவதல்ல. மாறாக செடிக் விளக்கமளிக்க வேண்டும். அவ்வளவுதான். ஆனால், அதன் பொறுப்பாளராக இருக்கும் தேவமணியின் போக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சிவகுமார் குறிப்பிட்டார்.
           முன்னதாக நடைபெற்ற விளக்கமளிப்பு கூட்டத்தில் டத்தோ டி.மோகன் மிபாவிற்கு செடிக் வழங்கிய மானியம் குறித்து விளக்களித்தார். இந்த விளக்கமளிப்பு கூட்டத்தில் டத்தோஸ்ரீ எம்.சரவணன், காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணன், பிறை நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு, பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார், செனட்டர் சந்திரமோகன், மீபா நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.

Comments