இந்திய இளைஞர்களுக்கு சிலாங்கூர் இந்து இளைஞர் எழுச்சி இயக்கம் வழிகாட்டியாக இருக்கும்! தலைவர் விக்னேஷ்வரன் பாலசந்திரன் நம்பிக்கை

இந்திய இளைஞர்களுக்கு சிலாங்கூர் இந்து இளைஞர் எழுச்சி இயக்கம் வழிகாட்டியாக இருக்கும்!
தலைவர்  விக்னேஷ்வரன் பாலசந்திரன் நம்பிக்கை

காப்பார், ஏப்.5-
     வாழ்க்கையில் வழிதவறிச் செல்லும் இந்திய இளைஞர்களுக்கு சிலாங்கூர் இந்து இளைஞர் எழுச்சி இயக்கம் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று அதன் தலைவர் விக்னேஷ்வரன் பாலசந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
           காப்பார் வட்டாரத்தில் இருக்கும் தவறான பாதைக்கு செல்ல முற்படும் இளைஞர்களை அரவணைத்து அவர்களை சரியான தடத்திற்கு கொண்டு செல்ல சிலாங்கூர் இந்து இளைஞர் எழுச்சி் பாடுபடும் என்று காப்பார் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற சிலாங்கூர் இந்து இளைஞர் எழுச்சி இயக்கத்தின் அறிமுக விழாவில் உரையாற்றுகையில் விக்னேஷ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.
      கடந்த ஜனவரி மாதத்தில் முறையாக பதிவு பெற்ற சிலாங்கூர் இந்து இளைஞர் எழுச்சி இயக்கம் அதற்கு முன்னதாகவே இளைஞர்களுக்கான நற்காரியங்களை செய்து வந்தது.
காப்பார் என்றாலே குற்றச்செயல் அதிகம் நடக்கும் பகுதியாக இருந்து வருகிறது. அதனை முதலில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காப்பார் வட்டாரத்தில் விளையாட்டுத் துறையில் குறிப்பாக கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை மாவட்ட, மாநில ரீதியில் கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் தொழில்திறன் கல்வியில் ஆர்வமுள்ள இளைஞர்களையும் பயிற்சிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற பல நடவடிக்கைகள் இளைஞர்களுக்காக மேற்கொள்ளப்படும் என்று விக்னேஷ்வரன் பாலசந்திரன் குறிப்பிட்டார்.
        இந்த நிகழ்ச்சியை மஇகா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார். அவர் தமதுரையில் இளைஞர்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பேன் என்று வாக்குறுதியளித்தார். இந்த நிகழ்வுக்கு எச்எஸ்டிசி ரிசோர்சஸ், லீடிங் குவாந்தம் கொன்டல்டென்சி நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரசேகரன் ஆதரவு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments