ஊடகவியலாளர்களை சுயநல தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகள்! தேசம் குணாளன் மணியம் வேதனை

ஊடகவியலாளர்களை சுயநல தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும்
அரசியல்வாதிகள்! தேசம் குணாளன் மணியம் வேதனை

கோலாலம்பூர், ஏப்ரல் 14-
         அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்களை சுயநல தேவைக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று பிரபல  பத்திரிகையாளரும் தேசம் பத்திரிகையின் தலைமையாசிரியருமான குணாளன் மணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
           ஊடகங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. தனிசக்திமிக்க ஊடகவியலாளர்களை ஒரு சில 
அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஊடகவியலாளர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். தங்கள் தேவைக்கு மட்டும் ஊடகவியலாளர்களை பயன்படுத்திக் கொண்டு மற்ற நேரங்களில் அவர்களை கழற்றி விடுகிறார்கள். தங்களுக்கு தேவை ஏற்படும் போது மீண்டும் அவர்களை அணுகுகிறார்கள். இது முற்றிலும் வருத்தமளிக்கும் ஒரு நடவடிக்கை என்று தேசம் பத்திரிகையின் தோற்றுநருமான குணாளன் மணியம் வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.
           ஒரு சில அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்களை பார்த்தவுடன் "தலைவா தலைவா" என்று போலி வேஷம் போடுகிறார்கள். ஒரு சில அரசியல் தலைவர்கள் சிரித்தே மயக்கி விடுகிறார்கள். தங்கள் தேவைகளை ஊடகவியலாளர்கள் மூலம் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். ஆனால், ஊடகவியலாளர்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள். இதில் உதவி கோரிய பல ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதை தாம் அறித்துள்ளதாக குணாளன் மணியம் தெரிவித்தார்.
           இதில் சில பத்திரிகையாளர்கள் அரசியல் தலைவர்கள் சிலரிடம் உதவி கோரியிருந்ததாகவும் "செய்கிறேன்" என்று வாக்குறுதி வழங்கிவிட்டு இன்று வரையில் தெரியாதது போல் இருக்கும் அரசியல் தலைவர்களை என்னவென்று சொல்வது என்று குணாளன் மணியம் கேள்வி எழுப்பினார்.
          தேசிய முன்னனி அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி ஊடகவியலாளர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தங்களுக்கு வேண்டிய ஊடகவியலாளர்களை மட்டும் தூக்கி வைத்து கொண்டு ஆடக்கூடாது. நேற்று பெய்த மழையில் பூத்த காளான் ஊடகம் ஒன்றை  ஒரு அரசியல்வாதி தன் சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டு பணத்தை வாரி வழங்கியிருப்பதாக கிடைத்த தகவல் மற்ற ஊடகங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்று குணாளன் மணியம் கேட்டுக் கொண்டார். 
   பொதுத் தேர்தல் மானியங்களுக்காக திடீர் வலைத்தள ஊடகம், இயூடியூப் தொலைக்காட்சி என்று தொடங்கிய அரசியல்வாதிகளும் இருக்கவே செய்கிறார்கள். இவர்கள் நினைத்திருந்தால் ஏற்கெனவே இருக்கும் வலைத்தள ஊடகத்திற்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம். ஆனால், சொந்தமாக தொடங்கிய  ஊடகம் என்றால் மானியம் கிடைக்கும் அல்லவா? இதற்காக மற்ற வலைத்தள ஊடகங்களை புறக்கணித்து விட்டு சொந்த ஊடகங்களை அரசியல்வாதிகள் உருவாக்கிக் கொள்வது வேதனையளிக்கிறது என்று குணாளன் மணியம் சொன்னார்.
          ஆகையால், ஊடகங்களுக்கு அரசியல்வாதிகள் உதவ வேண்டும். ஊடகவியலாளர்களை மதிக்க வேண்டும். ஊடகவியலாளர்களை சுயநலத் தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று பத்திரிகை துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றி கடந்த 8 ஆண்டுகளாக சொந்தமான தேசம் பத்திரிகை, தேசம் வலைத்தளம், தேசம் தொலைக்காட்சி என்று நடத்தி வரும் குணாளன் மணியம் வலியுறுத்தினார்.

Comments