புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் பூர்த்தி செய்வோம்! மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் பூர்த்தி செய்வோம்! மலேசிய  சுகாதார  அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர்  ச. சுப்பிரமணியம் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், ஏப்ரல் 14-
      சித்திரை முதல் நாளை இந்து புத்தாண்டாகக் கொண்டாடும் அனைத்து இந்துகளுக்கும், எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரை மாதம் வரவேற்கப்படுகிறது. சித்திரை மாதம் பிறந்ததுமே ‘இளவேனிற்காலம்’ எனும் வசந்தக் காலம் தொடங்குகிறது. அதுபோல் மலேசிய நாட்டு இந்தியர்களின் வாழ்விலும் வசந்தக்காலம் மலர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்று டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
      “விளம்பி” ஆண்டு இந்து புத்தாண்டைக் கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் புத்துணர்ச்சி, புதிய சிந்தனை, ஐக்கியம், சமயம், சமூகம், கலாச்சாரம், பண்பாடு, அமோக வெற்றி போன்றவற்றை எடுத்துக் காட்டும் வகையில் இந்நாள் அமைய வேண்டும். நல்லெண்ணம், நல்லுறவு, அன்பு, விருந்தோம்பல் போன்ற மனிதப் பண்பாட்டின் உயர்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் இச்சித்திரை திருநாள் கொண்டாடப்பட வேண்டும்.
     இன்னும் சில நாட்களில் நாட்டின் 14வது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இப்பொதுத்தேர்தல் நம் இந்திய சமுதாயத்திற்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும். எனவே, நடைபெறவிருக்கும் இப்பொதுத்தேர்தலில் நம் மலேசிய இந்தியர்கள் உணர்ச்சியின் அடிப்படையில் அல்லாமல் நம் சமுதாய ஒற்றுமையையும் எதிர்காலத்தையும் கருதில் கொண்டு, இந்தியர்களின் நலனுக்காக இதுநாள்வரையில் அரசாங்கம் வழங்கியுள்ள சலுகைகளோடு எதிர்கால தேவைகளையும் முன்னிறுத்தி தெளிந்த முடிவினை எடுக்க வேண்டுமென்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
      நாம் எடுக்கக்கூடிய தெளிவான முடிவின் அடிப்படையிலேயே தொடர்ந்து அரசாங்கம் வழங்கக்கூடிய சலுகைகளைப் பயன்படுத்தி கல்வி, பொருளாதாராம், வாழ்வாதாரம் அனைத்திலும் முன்னேற்றம் கண்ட சமுதாயமாகவும் புதியதொரு சமுதாயமாகவும் உருமாற்றம் காண முடியும்.
      அதேநேரத்தில், நம் நாட்டில் இந்தியர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 7% ஆகும். குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், தமிழ், மலையாளம், தெலுங்கு, சீக்கிய வம்சாவளியினர் என்னும் வேறுபாடுகளைக் களைந்து, எல்லா நிலையிலும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய உந்து சத்தியாகத் திகழ வேண்டும் என்பதே சமுதாயத் தலைவர் எனும் முறையில் எனது ஆசையாகும்.
     எனவே, புதியதொரு உருமாற்றத்திற்கு நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளை ஒதுக்கி ஒரே குரலில் ஒலித்து ஒரே நோக்கத்துடன் செயல்பட வேண்டும். அனைவரும் ஒரே குரலில் இயங்கினால்தான் இந்நாட்டில் இந்தியர்களின் உரிமைகளையும் தேவைகளையும் நிலைநிறுத்த முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
      அவ்வகையில், 60 ஆண்டுகளின் சுற்றுவட்டத் தொடரில் 32 ஆவது ஆண்டான “விளம்பி” ஆண்டு மலேசியா வாழ் அனைத்து இந்துகளுக்கும் எல்லா நிலையிலும் மாற்றம் கொண்டு வரும் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். இந்துக்கள் அனைவருக்கும் இந்து புத்தாண்டு வாழ்த்துகள் என்று டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Comments