இந்தியர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்! புத்ராஜெயாவை கைப்பற்றுவோம்! கணபதிராவ் சூளுரை

இந்தியர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்!
புத்ராஜெயாவை கைப்பற்றுவோம்!
கணபதிராவ் சூளுரை

குணாளன் மணியம்

கிள்ளான், ஏப்ரல் 8-
          இந்தியர்கள் மட்டுமன்றி அனைத்து இனங்களும் மாற்றத்தை எதிர்கொள்ள தயாராகி விட்டதால் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி புத்ராஜெயாவை கைப்பற்றும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் சூளுரைத்துள்ளார்.
            மக்கள் குறிப்பாக இந்தியர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். கடந்த காலங்களில் இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டதன் காரணமாக ஹிண்ட்ராப் போராட்டம் நடந்தது. இதனால் இந்தியர்கள் கொதித்தெழுந்தனர். இது இந்தியர்கள் மஇகா மீது நம்பிக்கையை இழக்கச் செய்தது. இந்த அதிருப்தி 2008 பொதுத் தேர்தலில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. ம இ கா ஜாம்பவான்கள் தோல்வி கண்டனர் 2013 தேர்தலிலும் இந்நிலை தொடர்ந்தது. இந்நிலையில் எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் என்று ஆலயங்கள், பொது இயக்கங்களுக்கு நிதியுதவி காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.
          அம்னோவின் அதீத பலத்தினால் மஇகா பலவீனமானது. எல்லாவற்றுக்கும் தலையாட்டி பொம்மையாக இருந்ததால் மஇகா தன் உரிமையை இழந்து விட்டது. இந்தியர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யவில்லை. இதில் செடிக் பணத்தை உதாரணமாகக் கூறலாம். நாடாளுமன்றத்தில் மாண்புமிகு சிவகுமார், கஸ்தூரி பட்டு, மாண்புமிகு மணிவண்ணன் ஆகியோர் செடிக் குறித்து கேள்வி கேட்ட போதிலும் இதுவரையில் முறையான பதில் இல்லை.
           செடிக் பணம் வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. செடிக் பணம் 5 லட்சம் இந்தியர்களுக்கு  வழங்கப்பட்டிருந்தால் நால்வருக்கு ஒருவர் பயனடைந்திருப்பார்கள். ஆனால், சாதாரண மக்களுக்கு கிடைக்கவில்லை. மாறாக அதிகாரத்தில் உள்ள சிலருக்கு பெரிய தொகை கிடைத்திருப்பது இந்தியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கணபதிராவ் சொன்னார்.
          இத்தகைய பல நடவடிக்கைகள் ம இ கா மீது நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. மேலும் மஇகாவில் ஏற்பட்ட தலைமைத்துவ போராட்டம் நம்பிக்கையை இழக்கச் செய்தது. இத்தகைய நிலவரங்கள் நம்பிக்கை கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்தியர்கள் எதிர்கட்சிக்கு முழு ஆதரவு வழங்குவதால் புத்ராஜெயாவை எளிதில் கைப்பற்றி விடலாம் என்று கணபதிராவ் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments