பொதுத் தேர்தல் டாக்டர் சுப்பிரமணியத்திற்கு ஓர் அக்னிப் பரீட்சை! எந்த முடிவிற்கும் அவரே பொறுப்பேற்க நேரிடும்! டத்தோ மலர்விழி குணசீலன் வர்ணனை!

பொதுத் தேர்தல் டாக்டர் சுப்பிரமணியத்திற்கு ஓர் அக்னிப் பரீட்சை!
எந்த முடிவிற்கும் அவரே பொறுப்பேற்க நேரிடும்!
டத்தோ மலர்விழி குணசீலன் வர்ணனை!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 9-
       நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்திற்கு ஓர்  அக்னிப் பரீட்சை என்று மலேசிய மக்கள் சேவை மையத்தின் தலைவர் டத்தோ பி.மலர்விழி குணசீலன் கூறினார்.
         கடந்த காலங்களில் குறிப்பாக மாணிக்கவாசகரம், துன் சாமிவேலு, டத்தோஸ்ரீ பழனிவேல் ஆகியோரின் தலைமைத்துவத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் ஆறு மாதம், ஒரு வருடத்திற்கு முன்பே அடையாளம் காணப்பட்டு அவர்களை களத்தில் இறக்கி மக்களுக்கு சேவையாற்ற வைப்பது மஇகாவின் வழக்கம்.
ஆனால், தற்போதைய சூழல் அப்படியில்லை. இதில் மற்ற கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில் மக்கள் சேவை மையம், நடவடிக்கை அறையை திறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மஇகாவில் மட்டும் பலர் யார் வேட்பாளர் என்று தெரியாமல் தங்களுக்குத்தான் சீட் என்று மந்திரித்து விடப்பட்டவர்கள் போல் திரிந்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் தங்களுக்கு சீட் கிடைக்கும் என்று நினைத்து காத்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது வேதனையாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது என்று டத்தோ மலர்விழி குணசீலன் தெரிவித்தார்.
      ஒரு காலத்தில் செனட்டர் பதவிகள் மக்கள் செல்வாக்கைப் பெற்றவர்களுக்கு வழங்கியிருந்தார் துன் சாமிவேலு. ஆனால், மக்கள் செல்வாக்கு பெறாதவர்களை டாக்டர் சுப்பிரமணியம் நியமனம் செய்கிறார். இதை கேள்வி கேட்க யாரும் இல்லை. ஆனால், மக்கள் ஆதரவைக் கேட்டு மக்கள் மத்தியில் வேட்பாளராக நிறுத்தப்படுபவர்கள் டாக்டர் சுப்பிரமணியத்தின் ஆதரவையும் அபிமானத்தையும் பெற்றவர்களா அல்லது கட்சி மற்றும் மக்கள் சேவையின் மூலம் மக்கள்  ஆதரவைப் பெற்றவர்களா என்பதை அறிய இந்திய சமுதாயம் காத்துக் கொண்டிருக்கிறது என்றார் மலர்விழி குணசீலன்.
        இந்த 14ஆவது பொதுத் தேர்தல் டாக்டர் சுப்பிரமணியத்திற்கு ஒரு சவால்மிக்க அக்னிப்பரீட்சை தேர்தலாகும். இதில் அவர் எடுக்கும் எந்த முடிவிற்கும் அவரே பொறுப்பேற்க நேரிடும் என்று டத்தோ பி.மலர்விழி குணசீலன் வலியுறுத்தினார்.

Comments