ஏ.கே.ராமலிங்கம் தரப்பினருக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையா?

ஏ.கே.ராமலிங்கம் தரப்பினருக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையா?

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 18-
           மஇகாவில் ஏற்பட்ட தலைமைத்துவ போராட்டத்தில் அதிலிருந்து வெளியேறிய ஏ.கே. ராமலிங்கம் தரப்பினருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாதது  குறித்து அவர்கள் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் கசிந்தள்ளது.
         டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு ஆதரவாக இருந்த ஏ.கே.ராமலிங்கம் தரப்பினரை மீண்டும் மஇகாவில் இணைத்துக் கொள்வதற்கு அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் உடன்பாடு கண்டுள்ளதாக தெரிகிறது. இதில் ஏ.கே.ராமலிங்கம் தரப்பில் இருக்கும் டத்தோ எஸ்.சோதிநாதன், டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், டத்தோ ஹென்றி பெனாடிக், டத்தோ வி.ராஜு, டத்தோ ரமணன் ஆகியோரை மீண்டும் மஇகாவில் இணைத்துக் கொள்வதற்கு டாக்டர் சுப்பிரமணியம் தேர்தல் சீட் வழங்குவது, செனட்டர்  உள்ளிட்ட சில வாய்ப்புகளை வழங்க கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அதன் பிறகே ஏ.கே.ராமலிங்கம் தரப்பினர் டாக்டரோடு இணைய சம்மதம் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.
          இந்நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது கண்டு ஏ.கே.ராமலிங்கம் தரப்பு அதிருப்தியடைந்துள்ளதாகவும் டாக்டர் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றால் அவர்கள் எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
          நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தல் மே 9ஆம் நாள் நடத்தப்படுகிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 28ஆம் நாள் நடைபெறவிருக்கிறது. இதில் மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அடையாளம் கண்டுவிட்ட நிலையில் மஇகா மட்டும் இன்னும் வேட்பாளர்களை தேடிக் கொண்டிருப்பது தலைமைத்துவ பலவீனத்தை காட்டுகிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
          துன் சாமிவேலு மஇகா தலைவராக இருந்த போது இப்படி நடக்கவில்லை.  ஆனால், இப்போது தகுதியான வேட்பாளரை அடையாளம் காணக்கூட கட்சித் தலைமை தவித்துக் கொண்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக மஇகா உறுப்பினர்களே கவலை தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Comments