செடிக் மூலம் மிஃபாவிற்கு 1.9 மில்லியன்? டத்தோ டி.மோகன் மறுப்பு!

செடிக் மூலம் மிஃபாவிற்கு 1.9 மில்லியன்?
டத்தோ டி.மோகன் மறுப்பு!
 
கோலாலம்பூர் மே 26 -
     மலேசிய இந்திய காற்பந்து சங்கத்திற்கு இந்த  ஆண்டு  செடிக் மூலம் 1.9 மில்லியன் கிடைக்கப்பெற்றதாக தவறான கண்ணோட்டத்தில்  ஒரு செய்தி பரவி வருகின்றது. இது உண்மை அல்ல என மிஃபாவின் தலைவரும் செனட்டருமான டத்தோ டி.மோகன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
      ஆட்சி மாற்றத்திற்கு பின்பு மிஃபா மிகவும் மோசமான சூழலை எட்டியுள்ளது. கடந்த காலங்களில்  அரசாங்கத்தின் உதவியோடும்  மற்றும் பல நல்ல உள்ளங்களின் ஆதரவோடும்  சமுதாயத்தை பிரதிநிதித்து மிஃபா அணி முன்னோக்கி சென்றது. இன்றைய காலக்கட்டத்தில் பொருளாதார ரீதியில் நமது  அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு அணியை வழி நடத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளோம்.
        அப்படிப்பட்ட  சூழ்நிலையில் மிஃபா அணிக்கு 1.9 மில்லியன் கிடைத்துள்ளது என்ற நிலைப்பாட்டிலான உண்மைக்கு புறம்பான செய்தி மிஃபா நன்கொடையாளர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  அதோடு பொதுமக்களும் மிஃபாவின் மீது தவறான கண்ணோட்டம் கொள்ள நேரிடுகிறது.

மிஃபாவிற்கு செடிக் மூலம் 6 லட்சத்து 40,810 வெள்ளி மட்டுமே இந்த ஆண்டு கிடைக்கப்பெற்றது. இந்தப்பணம் மிஃபாவினால் நடத்தப்பட்டு வரும் மிஃபா பயிற்சி மையங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த மையங்களின் வழி நாடு தழுவிய நிலையில் 1800 -க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு இலவச காற்பந்து பயிற்சிகள் வழங்கப்பட்டன.
      இந்திய சமுதாய இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், அவர்களை கால்பந்துத்துறையில் சிறந்து விளங்க செய்யவும் மிஃபாவினால் இந்த பயிற்சி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கு மட்டுமே செடிக் வழி உதவி கிடைக்கப்பெற்றது. அதனைவிடுத்து மிஃபா அணிக்கு எந்த உதவியும் கிடைக்கப்பெறவில்லை என அவர் விளக்கமளித்தார்.
      அதோடு மலேசிய கால்பந்துத்துறையில் மிஃபா அணியை நிலைத்திருக்க செய்யவும், இந்த அணியை வழிநடத்தவும்  இந்தியத்தலைவர்களிடம் பேசி வருகின்றோம். ஒரு  சுமூகமான நிலை ஏற்படுமானால் மிஃபாவை அவர்களிடம் ஒப்படைக்கவும் தயாராக உள்ளோம். எங்களது நிலைப்பாட்டில் சமுதாய இளம் காற்பந்து வீரர்களுக்கு ஒரு களம் இருக்க வேண்டும் அதன் வழி அவர்கள் கால்பந்துத்துறையில்  பொருளாதார ரீதியில் முன்னோக்கி செல்ல வேண்டுமென்பதாகும் என்றார் அவர்.
மிஃபா அணி மலேசிய பிரிமியர் லீக்கில் புள்ளிப்பட்டியலில் 3ஆம் நிலையில் உள்ளது. மலேசிய கிண்ண் கால்பந்து போட்டிகளுக்கு தகுதிபெறவும் வாய்ப்புள்ளது. பொருளாதார ரீதியில் நமது அணி மற்ற அணிகளை விட பல மடங்கு சிறிய அணியாக இருப்பினும் சிறப்பாக செயல்பட்டு ஒரு சிறந்த அடைவு நிலையை எட்டியுள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட தரப்பினர் உண்மைக்கு புறம்பாக பொய்ச்செய்திகளை பரப்பாமல் மிஃபா அணிக்கு ஆதரவளித்து நமது சமுதாய அணியை நிலைத்திருக்க செய்ய கரம் கொடுங்கள். என் மீது பழிசுமத்த எண்ணி சமுதாய அணியை அழித்து விடாதீர்கள்  என டத்தோ டி.மோகன் தெரிவித்துள்ளார்.

Comments