மஇகா தேசிய முன்னனியிலிருந்து விலகி தனி கட்சியாக இயங்க வேண்டும்! டத்தோ ரவிச்சந்திரன் ஆலோசனை

மஇகா தேசிய முன்னனியிலிருந்து விலகி தனி கட்சியாக இயங்க வேண்டும்!
டத்தோ ரவிச்சந்திரன் ஆலோசனை

கோலாலம்பூர், மே 19-
       மஇகா தேசிய முன்னனியில் இருந்து வெளியேறி தனிக்கட்சியாக செயல்பட வேண்டும். என்று சிலாங்கூர் மாநில மஇகா செயலாளர் டத்தோ ந.ரவிச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.   
       இளைய தலைமுறையினருக்கு உகந்த கட்சியாக மஇகாவை உருமாற்ற வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கின்றோம். ‘பழைய குருடி கதவ திறடி’ என்கிற பல்லவிக்கு தொடர்ந்து தூபம் போடாது, புதியதோர் சமுதாயத்தின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்திச் செய்யக்கூடிய – வேகமும் விவேகமும் பொருந்திய கட்சியாக மஇகாவை உருமாற்ற வேண்டும் என்று டத்தோ ரவிச்சந்திரன். கேட்டுக் கொண்டார்.
       தேசிய முன்னணி (தே.மு) கூட்டணியில் இருப்பதனால், நம் சமூகத்தின் ஆதரவை நாம் இழக்க நேரிடும் சூழல் தொடர்ந்து இருப்பதால், அக்கூட்டணியிலிருந்து வெளியேறி தனிச்சையாக செயல்படுவது சிறந்த முடிவாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. கடந்த 6 மாதத்துக்கு முன் தொடங்கப்பட்ட பிரிபூமி கட்சியானது, இன்று தனது சாணக்கியத்தால் ஆட்சிப் பீடத்தை  தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த அரசியல் நகர்வானது, மஇகாவுக்கும் ஒரு செய்தியை விட்டுச் சென்றுள்ளது. இந்திய சமூகத்தின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் ஒருமித்த குரலோடு தக்க வைத்துக் கொள்ள, மஇகாவின் செயல்பாடுகள் தனிச்சையாக இருத்தலே நலம்  என்று தோன்றுகிறது என டத்தோ ரவிச்சந்திரன் குறிப்பிட்டார்.
      கூட்டணி கொள்கையினால் சமூகத்தின் உரிமைகளுக்காக முழுச் சுதந்திரத்தோடு போராட முடியாத சூழல் இருப்பதை சுட்டிக்காட்டிய டத்தோ ரவிச்சந்திரன், இந்நிலை நீடித்தால் இந்திய சமூகத்தின் கொஞ்ச நஞ்ச ஆதரவையும் கட்சி இழக்க நேரிடும் என அபாயச் சங்கொலி எழுப்பினார்.
       தனித்து நின்று போராடும் கொள்கையை, கட்சி ஏற்றுக் கொள்ளுதல் நலம் என்றுரைத்த அவர், மஇகாவின் பெயரையும் முழுமையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
        சமூகத்தில் பல்வேறு நிலைகளிலுள்ள மக்கள், மஇகாவை வெறுக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொண்ட அவர், கட்சிக்கு புத்துயிர் கொடுக்க வேண்டியதன் அவசியம் எவ்வளவு ஆழமானதோ, அதைவிட மேலானது கட்சியின் பெயரையும் மாற்றுவதுதான் என்றார் அவர்.

Comments