தேசிய முன்னனி மகத்தான வெற்றி பெறும்! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் நம்பிக்கை!

தேசிய முன்னனி மகத்தான வெற்றி பெறும்!
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் நம்பிக்கை!

மு.வ.கலைமணி

பட்டர்வொர்த், மே, 4.
      மலேசிய இந்திய சமுதாயம் அரசியல், பொருளாதார மற்றும் சமூக துறைகளில் மேம்பாடு காண தேசிய முன்னணி அரசாங்கத்தை இந்தியர்கள் முழுமையாக ஆதரிக்க வேண்டுமென ம.இ.கா  தேசிய உதவித் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
         நாட்டு மக்கள் அமைதியாகவும் ஐக்கியத்துடனும் சுபீட்சமாக வாழ்வதற்கு அரணாக இருப்பது தேசிய முன்னணி அரசுதான்.
இதனால் நமது வருங்கால சந்ததியினருக்கு நிலையான ஆட்சியை வழங்க முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
      பாகான் டாலாம் சட்டமன்ற தேர்தல் நடவடிக்கை அறையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து சட்டமன்ற ம.இ.கா. வேட்பாளர் ஜே.தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான அவர்  கூறினார்.
         பினாங்கில்  பாகான் டாலாம், மற்றும் பிறை ஆகிய இரு தொகுதிகளில் ம.இ.கா போட்டியிடுகிறது. ம.இ.கா
60 ஆண்டுகால வரலாற்றில் மலேசிய இந்தியர்களுக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கின்றது ம.இ.கா.
 ஒரு அரசியல் கட்சியாக மக்களுக்கு மகத்தான சேவையை அது வழங்கி வந்துள்ளது.
ம.இ.கா. இந்தியர்களின் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தி வந்துள்ளது. இந்தியர்களின் தேவைகளை அறிந்து செயல்பட்டது மஇகாதான். குறிப்பாக தோட்டத் துண்டாடல் பிரச்னை எழுந்தபோது, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தை தோற்றுவித்ததும் ம.இ.கா. தான்.
2009 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை மலேசியாவில் உள்ள பல தமிழ்ப்பள்ளிகள் உருமாற்றம் கண்டதற்கு வித்திட்டவர் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்தான்.
இதில் குறிப்பாக 80 கோடி வெள்ளியை தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக அவர் வழங்கினார். கூடுதலாக 7 தமிழ்ப்பள்ளிகளை கட்டுவதற்கும் அவர் வழிவகை செய்தார் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் புகழாரம் சூட்டினார்.
       கடந்த காலத்தில் தேசிய முன்னணி செய்த தவறுகளுக்கு இந்திய சமுதாயத்திடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டு, அப்பிரச்னைகளை களைய நடவடிக்கையையும் முன்னெடுத்தவர். ஆனால் தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சிகள் ஆயிரம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள். ஆனால் , இது எதுவும் இந்தியர்களுக்கு நன்மையை கொண்டு வராது என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
      பாகான் டாலாம் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றால், மத்திய அரசின் மூலம் இப்பகுதி மக்கள் பல நன்மைகளை அடைவார்கள். இந்நிலையில் அடுத்த புதன்கிழமை நடக்கும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னனி அபார வெற்றி பெறுமென்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Comments