சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் பல வீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு! பிரகாஷ்ராவ் வாக்குறுதி

சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் பல வீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு!
பிரகாஷ்ராவ் வாக்குறுதி

குணாளன் மணியம்

சுங்கை பூலோ,மே. 6-
       அடைமழையில் ஏற்படும் வெள்ளத்தில் வீட்டுப் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கும் சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்களுக்கு உதவ முயற்சி மேற்கொள்ளப்படும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாஷ்ராவ் வாக்குறுதியளித்துள்ளார்.
     இதில்  வீட்டை இழந்து பரிதவித்த பண்டார் பாரு சுங்கை பூலோ குடியிருப்பாளர்  இந்திய மாது இராஜேஸ்வரிக்கு உதவிக்கரம் நீட்ட தாம் முயற்சி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக  தேசிய முன்னணி சார்பாக போட்டியிடுகின்ற அ.பிரகாஷ்ராவ் தெரிவித்தார்.
பிரகாஷ்ராவ் அண்மையில் பண்டார் பாரு சுங்கை பூலோவில் வசிக்கின்ற இந்திய வாக்காளர்களை சந்தித்தார்.
       இந்த மக்கள் சந்திப்பில் கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும், நான்கு ஆண்டுகளாக இத்தொகுதி மக்களுக்கான தனது  சேவைகள் குறித்து பிரகாஷ்ராவ் விளக்கமளித்தார்.
          இந்த கூட்டத்தில் குடும்பமாது இராஜேஸ்வரி தன் வீட்டுப் பிரச்சினை குறித்து அழுகுரலோடு தெரிவித்தது கூட்டத்தினரைய கண்கலங்கச் செய்தது. இதனை சற்றும் எதிர்பாராத பிரகாஷ்ராவ், அம்மாதுவை சமாதானப்படுத்தி, நிச்சயமாக ஒரு புது வீட்டை ஏற்பாடு செய்துக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.
      இதற்கிடையில், கடந்த 28 ஆண்டுகளாக கம்போங் பூங்கா ராயா நீண்ட வீடுகளில் வசித்து வரும் 118 இந்தியக் குடும்பங்களுக்கு, புதிய பிபிஆர் அடுக்குமாடி வீடுகளை பெற்றுத் தரும் முயற்சியில் பிரகாஷ்ராவ் வெற்றிக் கண்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது, அவர்களோடு சேர்த்து, சுபாங் தோட்ட மக்களில் 50 குடும்பங்களுக்கும் அவ்வீடுகளை பெற்றுத்தருவதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். அந்த பிபிஆர் அடுக்குமாடி வீடுகள் பகுதியில் வீற்றிருக்கும் இந்து ஆலய வளாகத்தில் வெ.20 லட்சம் செலவில் பலநோக்கு மண்டபத்தை கட்டுவதற்கான திட்டத்தையும் பிரகாஷ்ராவ் மேற்கொள்ளவிருக்கிறார்.

Comments