மஇகாவிற்கு புத்துயிரளிக்க புறப்பட்டிருக்கும் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கரங்களை வலுப்படுத்துவோம்! டத்தோ ரவிச்சந்திரன் வேண்டுகோள்

மஇகாவிற்கு புத்துயிரளிக்க புறப்பட்டிருக்கும் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கரங்களை வலுப்படுத்துவோம்!
டத்தோ ரவிச்சந்திரன் வேண்டுகோள்!

கோலாலம்பூர், மே 19-
          மஇகா தலைமைத்துவத்தை ஏற்று அதற்கு  புத்துயிரளிக்கப் புறப்பட்டிருக்கும் அதன் தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம் என்று சிலாங்கூர் மாநில செயலாளர் டத்தோ ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
       பொதுத் தேர்தலில் எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்திருக்கும்  மஇகாவுக்கு, புத்துயிர் அளிக்கப் புறப்பட்டிருக்கும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் அதிரடி நடவடிக்கையைப் பாராட்டுவதாக ரவி குறிப்பிட்டார்.
       நாம் அனைவரும் ஒன்றிணைந்து டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.
“பொதுத்தேர்தலில் மிக மோசமான தோல்வியை மஇகா பதிவு செய்துள்ள இவ்வேளையில், கட்சியை தொடர்ந்து வழிநடத்த பலரும் யோசிப்பர். ஆனால், டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சிறிதும் மனம் தளராமல், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று, கட்சியின் எல்லா நிலைகளிலும் உருமாற்றம் கொண்டு வர முன்வந்துள்ளார்.
     “டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் துணிச்சலான அரசியல் நகர்வானது, என்னைப் போன்ற  பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சமூகத்தின் தாய்க்கட்சியான மஇகா, புதிய பெயரோடு தொடர்ந்து சக்தி மிக்கதாக எழுந்து நிற்க தொண்டர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டும். நடப்புத் தலைவர்களும்  புதிய தலைமுறைக்கு வழிவிட வேண்டும்.  அதற்கு நானும் முன்னுதாரணமாக இருப்பேன். இந்திய சமூகத்தின் இதயக் குரலாக இப்புதிய இந்தியர் கட்சியை ஒலிக்கச் செய்திட வேண்டும். இவை சாத்தியமாக, டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் கரங்களை வலுப்படுத்த ஒன்றினைவோம். புதிய  சிந்தனையோடு; புதிய பெயரோடு; புதிய களத்தோடு!” என்று டத்தோ ரவிச்சந்திரன் அறைகூவல் விடுத்தார்.
         மஇகா தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அவர்களுக்கு தாம் முழு ஆதரவு வழங்குவதாகவும் டத்தோ ரவிச்சந்திரன் குறிப்பிட்டார்.

Comments