முகநூல், வாட்ஸ்அப் வழி உண்மைக்கு புறம்பாக அவதூறுகள்! டத்தோ டி.மோகன் காவல் துறையில் புகார்

முகநூல், வாட்ஸ்அப் வழி உண்மைக்கு புறம்பாக அவதூறுகள்!
டத்தோ டி.மோகன் காவல் துறையில் புகார்

கோலாலம்பூர், மே 20-
      உண்மைக்கு புறம்பாக என் மீது  முகநூல், வாட்ஸ்அப் வழி அவதூறுகள் பரப்பி வருவதற்கு எதிராகவும், பொய்ச்செய்திகளை பரப்புவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கும் வண்ணமும் போலீஸ்புகார் செய்துள்ளதாக மஇகாவின் உதவித்தலைவர் செனட்டர்  டத்தோ டி.மோகன் டாங் வாங்கி காவல் நிலையத்தில் புகார் செய்த பின்பு பத்திரிக்கை யாளர்களுக்கு பேட்டியளிக்கையில்   தெரிவித்தார்.
       மிஃபாவிற்கு 19 மில்லியன் கிடைத்ததாகவும், மெகாடெக் கல்லூரியில் ஊழல் எனவும், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தோடு தவறான தோற்றத்தில்  தொடர்புபடுத்தியும் பொய்ச்செய்திகளை பரப்பி வருகிறார்கள். அவ்வாறாக அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும், என் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும்  செய்யப்படும் இந்த  வேலைகளுக்கு எதிராக எனக்கு தெரிந்த நிலையில் 25 நபர்கள் மீது புகார் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு விரைவில் நோட்டிஸ் அனுப்பப்படும் எனவும் அவர் கூறினார்.
      ஙமேலும் அவர் குறிப்பிடுகையில் மிஃபா குறித்து பல முறை விளக்கம் அளித்து விட்டேன்.
அதன் கணக்கு வழக்குகள் வெளிப்படையானவை. ஆனால், இது தெரிந்தும் சிலர் சம்பந்தம் இல்லாத வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொய்ச்செய்திகளை பரப்புவர்களுக்கு பாடமாக அமையும் என்றார் அவர்.
      எனக்கு போலீஸ் புகார் அளிக்க வேண்டிய எண்ணம் இல்லை. ஆனால் தவறிழைக்காத பட்சத்தில் நம் மீது அவதூறுகளை அள்ளி வீசப்படுவதை நினைக்கையில் மிகுந்த  மனவருத்தம் அளிக்கிறது.
எந்த ஓர் ஆதாரமும் இல்லாமல் ஒருவர் மீது குற்றம் சுமத்துவது தவறு. இதனை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். எனது நிலைப்பாட்டில் நான் சொல்லிக்கொள்வது  தயவு செய்து ஒரு செய்தியின் உண்மை நிலை அறியாது அதனை பரப்பாதீர்கள். இந்த மாதிரியான பொய்செய்திகளினால்  பலர் பாதிக்கப்படுகின்றனர்.அதனை தடுப்பது காவல்துறையினரின் கடமை என அவர் கூறினார்.
மேலும்  புதிய அரசாங்கம் குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறுகையில் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களின் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தியர்களை பிரதிநிதித்து 2 அமைச்சர்கள், 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இருக்கிறார்கள். இன்னும் துணை அமைச்சர்களுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அந்த சூழலில் கடந்த காலங்களைப்போல தமிழ்ப்பள்ளிகள் தொடங்கி இந்தியர்களின் மேம்பாட்டுத்திட்டங்கள் தொடரும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Comments