ஆலயங்களில் அரசியல் பேசுவதை தட்டிக் கேட்க எனக்கு உரிமையுண்டு! பிறை சட்டமன்ற வேட்பாளர் சுரேஷ் முனியாண்டி காட்டம்!

ஆலயங்களில் அரசியல் பேசுவதை தட்டிக் கேட்க எனக்கு உரிமையுண்டு!
பிறை சட்டமன்ற வேட்பாளர் சுரேஷ் முனியாண்டி  காட்டம்!

மு.வ.கலைமணி

பிறை, மே 8-
         பிறை, செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை பௌர்ணமி விழாவை பயன்படுத்தி  அரசியல் பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்த பகாதான் வேட்பாளர் பேராசிரியர் பி.ராமசாமி யை தட்டிக்கேட்க எனக்கு உரிமையுண்டு என சுரேஷ் சூளுரைத்தார்.
       சமயம் சார்ந்த விழாக்களில் ஆன்மீக உரைகள் நிகழ்த்த வேண்டியவர்கள் அரசியல் மேடைகளாக பயன்படுத்துவதை நான் மட்டுமல்ல, உண்மையான ஆண்மகன்கள் யாருமே  எதிர்க்கவே செய்வார்கள்.
ஓர் புனிதத் தலத்தில் புனிதம் காக்கப்பட வேண்டும் என்றுதான் நான் கேட்டுக் கொண்டேன். அது தவறா.?
அதனை பெரிய வியாக்கியானம் செய்து   என்னையும் என் நண்பர்களையும் குண்டர் கும்பல் என்று விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர் தெரிவித்தார்.
இங்குள்ள கம்போங் மெயின் ரோட் நிலப்பிரச்சனைக்கு தீர்வுக் காண பத்து வருடம் எடுத்துக்கொண்டும்  தீர்க்கப்படாமல் இருந்து வருவது குறித்து பேசிய அவர், இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண என்னால் முடியும், அதேவேளையில் இந்நிலம் புதிய மேம்பாட்டுக்கு இட்டுச்செல்லாமல் உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.
இந்த பத்து வருடக் காலத்தில் இந்தியர்கள் மட்டுமல்ல எல்லா இனமும் பல பிரச்சனைகளில் இங்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வெள்ளப்பிரச்சனையை தீர்க ஆக்ககரமான செயல்திட்டம் ஏதும் இதுவரையில் தீட்டப்படாமல் இருந்து வருவது வேதனை என குறிப்பிட்டார்.
      இங்குள்ள தெலுக் இண்டா பிளேட்டில் மின்சார விளக்குகள் பொருத்தி தந்துள்ளோம்.  மண்டப சீரமைப்பு, வளாகம் சுத்தம் செய்தல் போன்ற,  இன்னும் பல சேவைகளை மக்களுக்காக வழங்கியுள்ளோம்.
இந்தியர்களின் ஆதரவு பெருகி வருவதை அறிந்து உளம் மகிழ்கிறேன். அதைப்போலவே மலாய்காரர்களும் முழு அளவில் பேராதரவு தந்து வருகிறார்கள்.
சீனர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் இப்போது இறங்கியுள்ளோம்.
சென்ற இடங்கள் தோறும் ஆதரவுகள் தொடர்கின்றன. இந்த வெற்றியே எனக்கு சாதனையை தரும் என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

Comments