தமிழ்ப்பள்ளிகள் முழு உதவிப் பெற்ற அரசாங்கப் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும்! சிலாங்கூர் தமிழ்ச் சங்கத் தலைவர் சேகரன் வலியுறுத்தல்

தமிழ்ப்பள்ளிகள் முழு உதவிப் பெற்ற அரசாங்கப் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும்!
சிலாங்கூர் தமிழ்ச் சங்கத் தலைவர் சேகரன் வலியுறுத்தல்

தேசம் குணாளன் மணியம்

கிள்ளான், ஜுன் 5-
        நாடு தழுவிய நிலையில் இருக்கும் 530 தமிழ்ப்பள்ளிகளை முழு உதவிப் பெற்ற அரசாங்கப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று சிலாங்கூர் தமிழ்ச் சங்கத் தலைவர் எல்.சேகரன் வலியுறுத்தியுள்ளார்.
          தமிழ்ப்பள்ளிகள் முழு உதவிப் பெற்ற அரசாங்கப் பள்ளிகளாக மாற்றப்படாத வரையில் அப்பள்ளிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டுதான் இருக்கும். இப்பள்ளிகளை அரசாங்க உதவிப் பெற்ற பள்ளிகளாக மாற்றினால் பல்வேறு பிரச்சினையில் இருந்து அவைகளை விடுபட செய்யலாம் என்று தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய செய்தியில் சேகரன் தெரிவித்தார்.
        தமிழ்ப்பள்ளிகள் கழிப்பறை, வகுப்பறை, கூரை, சிற்றுண்டிச் சாலை என்று பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றன. இப்பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்ப்பள்ளிகளை முழு உதவிப் பெற்ற அரசாங்கப் பள்ளிகளாக மாற்றுவதுதான் சிறந்த நடவடிக்கை. அரசாங்கப் பள்ளிகளாக மாற்றினால் அவை  கல்வியமைச்சின் கீழ் மிகவும் சிறப்பாக செயல்படும். அதேநேரத்தில் தமிழ்ப்பள்ளி பிரச்சினைக்கு தீர்வு கண்ட ஒரு மனநிறைவு இந்திய சமுதாயத்திற்கு ஏற்படும் என்று சேகரன் சொன்னார்.
       நாட்டின் முந்தைய அரசாங்கம் இதனை கருத்தில் கொள்ளவில்லை. தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு அது எங்கே சென்றது என்றும் தெரியவில்லை. தற்போதைய நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் பிரதமர் துன் மகாதீர் தலைமையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் தமிழ்ப்பள்ளிகளை முழு உதவிப் பெற்ற அரசாங்கப் பள்ளிகளாக மாற்றி தமிழ்ப்பள்ளிகள் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று  எல்.சேகரன் பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments