இந்தியாவிற்கான விசா கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யுங்கள்! டத்தோ டி.மோகன் கோரிக்கை

இந்தியாவிற்கான விசா கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யுங்கள்!
டத்தோ டி.மோகன் கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 2-
        இந்தியாவிற்கான விசா கட்டண உயர்வு 195 வெள்ளியிலிருந்து, 462 வெள்ளியாக உயர்வு கண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.
ஆண்டுக்கு கிட்டத்தட்ட 8 லட்சம் மலேசியர்கள் இந்தியா சென்று வருவதாக தெரிகிறது. அப்படிப்பட்ட சூழலில் இந்த விலை உயர்வு நியாயமானதல்ல இதனை மறுபரீசீலனை செய்ய வேண்டுமென நாடாளுமன்ற மேலைவை உறுப்பினரும், மஇகாவின் உதவித்தலைவருமான டத்தோ டி.மோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
        இந்த விலை உயர்வு  இந்திய அரசாங்கத்தின் பாகுபாடான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது. இந்தோனேசியாவிற்கு விசா நிபந்தனையில்லாத நிலையும், சிங்கப்பூருக்கு விசா கட்டணத்தில்  உயர்வு இல்லாத நிலையும் இருக்கின்ற தருவாயில்  நமக்கு இந்த நிலை சரியானது அல்ல.
       இந்தியாவுடன் மலேசியாவிற்கு  பூர்வீகத்தொடர்பு உள்ளது  என்று சொல்லி பெருமிதம்  கொள்கின்ற நிலைப்பாட்டில் இந்த மாதிரியான பாகுபாடுகள் ஏமாற்றம் அளிக்கிறது.  மருத்துவம் சார்ந்தும், ஆன்மிகத்தலங்கள் சார்ந்தும் நம்மவர்கள் பலர் இந்தியா செல்கின்ற நிலையில் இந்தியாவின் சுற்றுலாத்துறை வளர்ச்சி நிலையை எட்டுகிறது. அப்படிப்பட்ட நிலையில் இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கது.  இந்த விலை நிர்ணயம் சார்ந்து இந்தியத்தூதரகம் அளித்துள்ள விளக்கம் ஏற்புடையதாக இல்லை.
       கடந்த  காலங்களில் தேசிய முன்னணி ஆட்சிக்காலத்தின் போது விசா கட்டணம் உயர்வு காணவிருந்த நிலையில் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அது தடுத்து நிறுத்தப்பட்டது. அதே போல் இன்றைய நடப்பு  அரசாங்கம் இந்த விலை உயர்வை  தடுத்து நிறுத்த வேண்டும் என டத்தோ டி.மோகன் தமதறிக்கையில் கேட்டுக்    கொண்டுள்ளார்.

Comments