இந்திய இளைஞர்கள் எதிர்காலத்திற்கு முன்னுரிமை! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தலைமைத்துவத்தில் மஇகா மறுமலர்ச்சி பெற வேண்டும்! ஐயப்பன் முனியாண்டி வலியுறுத்து

இந்திய இளைஞர்கள் எதிர்காலத்திற்கு முன்னுரிமை!
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தலைமைத்துவத்தில் மஇகா மறுமலர்ச்சி பெற வேண்டும்!
ஐயப்பன் முனியாண்டி வலியுறுத்து

தேசம் குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜூலை 18-
          மஇகாவின் 10ஆவது தேசியத் தலைவராக தேர்வு பெற்றுள்ள டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஷ்வரன் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்து மஇகாவில்  மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று பத்தாங் பெர்ஜுந்தை கலை, கலாச்சார, பண்பாட்டு மையத்தின் தலைவர். ஐயப்பன் முனியாண்டி வலியுறுத்தியுள்ளார்.
         கடந்த காலங்களில் துன் சாமிவேலு தலைமைத்துவத்தில் கட்டுக்கோப்புடன் இருந்த மஇகா அதன்பிறகு பலம் இழந்தது மட்டுமல்லாமல் இந்திய சமுதாயத்தின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்தது. இந்நிலையில்  மஇகாவின் 10ஆவது தலைவராக 3,616 கிளைத் தலைவர்களால் தேர்வு செய்யப்பட்ட  டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் இந்திய இளைஞர்களுக்கும் சமுதாயத்திற்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இதன்வழி மஇகா மறுமலர்ச்சி பெற வேண்டும் என்று குளோ ஆசியா கல்லூரியின் தலைவருமான ஐயப்பன் முனியாண்டி தெரிவித்தார்.
            மஇகாவில் மறுமலர்ச்சியை  ஏற்படுத்த டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதில் அதிகமான இளைஞர்களை மஇகாவிற்குள் கொண்டு வர வேண்டும். இளைஞர் ரத்தம் பாய்ச்சப்படுவதன் வழி மஇகா இளைஞர்களைக் கொண்டு புதிய பரிணாமம் பெறும். அதேநேரத்தில் இளைஞர்களுக்கான பலத் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்றார் ஐயப்பன் முனியாண்டி.
           மஇகாவில் வயதான குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்ட அனுபவமுள்ளவர்கள் தலைவர்களாக செயல்படாமல் இளைய தலைவர்களுக்கு  ஆலோசகர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டும். இவர்கள் தங்கள் அனுபவத்தை கற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். அதிகாரத்தை காட்டக்கூடாது.
            நாட்டின் தேர்தலில் இரண்டு முறை அல்லது அதற்கு மேல் தோல்வி கண்டவர்களை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால்  மஇகாவிலும் கட்சித் தலைமையகத்திலும் எந்தப் பதவியும் வகிக்காமல் சாதாரண உறுப்பினர்களாக சேவையில் இறங்க வேண்டும்.
         மஇகாவில் சாதி அரசியல், குண்டர் அரசியல் முற்றாக துடைத்தொழிக்கப்பட வேண்டும். இளைஞர்கள்தான் மஇகாவின் முதுகெலும்பு என்பதால் கல்வி, தொழிற்திறன் கல்வி, வேலை வாய்ப்பு, வர்த்தக மேம்பாடு போன்ற வாய்ப்புகள் இளைஞர்களுக்காக அமல்படுத்தப்பட வேண்டும்.
          மஇகா தொகுதி காங்கிரஸ் தலைவர்களாக இருக்கக் கூடியவர்கள் கல்வி கற்றவர்களாகவும் தலைமைத்துவ ஆற்றல் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தரமான, பலமான நிலையில் கிளைத் தலைவர்களை வழிநடத்த முடியும்.
          அதேநேரத்தில் இளைஞர் வயது வரம்பு எதுவரை என்றும் வரையறுக்கப்பட வேண்டும். ஏனெனில் 50, 60 வயதை கடந்தவர்களும் தங்களை இளைஞர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள் என்பதால் இந்த வயது வரம்பு அவசியம்.
            இந்நிலையில் கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் இயக்கங்களையும் தலைவர்களையும் சாடியவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்கச் சொல்ல வேண்டும். பல தலைவர்கள் மிகவும் கேவலமாக பேசியிருந்தது கண்டு  இந்திய மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
           இத்தகைய சில நடவடிக்கைகளின் வழி டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தலைமையில் மஇகா மறுமலர்ச்சி பெறும் என்பதோடு அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் நம்பிக்கையை பெற முடியும் என்று  பத்தாங் பெர்ஜுந்தை, ஜாலான் பாரு மஇகா கிளையின் முன்னாள் தலைவரான காலஞ்சென்ற ஐ.முனியாண்டியின் புதல்வருமான ஐயப்பன் குறிப்பிட்டார்.

Comments