சாகீர் நாயக் நிரந்தர குடியுரிமையை ரத்து செய்து நாடு கடத்த வேண்டும்! ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வேண்டுகோள்!

சாகீர் நாயக் நிரந்தர குடியுரிமையை ரத்து செய்து நாடு கடத்த வேண்டும்!
ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வேண்டுகோள்!

தேசம் குணாளன் மணியம்

கிள்ளான், ஜூலை 9-
          பணமோசடி, தீவிரவாத பேச்சு ஆகிய குற்றங்களுக்காக  இந்திய காவல் துறையால் தேடப்பட்டு வரும் சாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை உடனடியாக ரத்து செய்யப்பட்டு அவரை நாடு கடத்த வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
         சாகீர் நாயக் ஒரு குற்றவாளி. அதுவும் சொந்த நாடான இந்தியாவில் காவல் துறையால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அத்தகைய நபருக்கு தேசிய முன்னனி அரசாங்கம் மலேசிய நிரந்தர குடியுரிமையை வழங்கியுள்ளது. இது முற்றிலும் தவறு. இந்நிலையில் சாகீர் நாயக் நிரந்தர குடியுரிமை ர்த்து செய்யப்படாது என்றும் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படமாட்டார் என்றும் பிரதமர் துன் மகாதீர் கூறியிருப்பது வேதனையளிக்கிறது. சாகீர் நாயக் நிரந்தர குடியுரிமை ரத்து செய்யப்பட வேண்டும். அதேநேரத்தில் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் கணபதிராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
         நாம் ஏன் ஒரு குற்றவாளிக்கு அடைக்கலாம் தர வேண்டும்? தேசிய முன்னனி அரசாங்கம் செய்த தவற்றை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் செய்ய வேண்டுமா என்று கணபதிராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
          இந்திய காவல் துறை சாகீர் நாயக் ஒரு குற்றவாளி என்றும் பணமோசடி, தீவிரவாத பேச்சு ஆகிய குற்றங்களுக்காக தேடப்படுகிறார் என்றும் மலேசிய காவல் துறைக்கும் அரசாங்கத்திற்கும் விண்ணப்பம் செய்துள்ளது. ஆகையால், துன் மகாதீர் அவரது நிரந்தர குடியுரிமையை ரத்து செய்து நாடு கடத்த வேண்டும் என்று கணபதிராவ் வலியுறுத்தினார்.
           இந்திய காவல் துறையின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு மலேசியாவிற்குள் தஞ்சமடைந்த சாகீர் நாயக்கிற்கு தேசிய முன்னனி அரசாங்கம் நிரந்தர குடியுரிமை வழங்கியது. இதற்கு  நம்பிக்கை கூட்டணி இந்தியத் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அவருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் பிரதமர் துன் மகாதீரின் அறிவிப்பு உள்ளது. அவரது குடியுரிமை ரத்து செய்யப்படாது என்றும் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படமாட்டார் என்றும் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது.
        சாகீர் நாயக் இந்து மதத்தை மிகவும் இழிவாகப் பேசி மதமாற்றத்திற்கு துணை போனவர். இதனால் இந்துக்கள் கொதிப்படைந்திருந்தனர்.
           இந்த விவகாரம் தொடர்பில் இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து சாகீர் நாயக் நிரந்தர குடியுரிமை ரத்து செய்து நாடு கடத்த வேண்டும் என்று துன் மகாதீருக்கு கணபதிராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments