மலேசிய சைவ சமயப் பேரவையின் உலக சைவ மாநாடு சைவ சமயத்தின் உண்மையை வெளிக்கொணரும்!

மலேசிய சைவ சமயப் பேரவையின் உலக சைவ மாநாடு
சைவ சமயத்தின் உண்மையை வெளிக்கொணரும்!

தேசம் குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜூலை 10-
        மலேசிய சைவ சமயப் பேரவையின் நான்காம் ஆண்டு உலக சைவ மாநாடு
சைவ சமயத்தின் உண்மையை வெளிக்கொணரும் என்று பேரவையின் தேசியத் தலைவர் சிவத்தமிழ்ச்செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் கூறினார்.
           மலேசியா மட்டுமன்றி உலக நாடுகளைச் சேர்ந்த இந்து மக்கள் சைவ சமயம் குறித்து தெளிவில்லாமல் இருக்கின்றனர்.
இதனை தெளிவுபடுத்துவதற்காகவே மலேசிய சைவ சமயப் பேரவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக சைவ சமய நாட்டை நடத்தி வருவதாக செய்தியாளர் சந்திப்பில் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் தெரிவித்தார்.
           மலேசிய சைவ சமயப் பேரவையின் சைவ மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாக இந்த மாநாடு ஜூலை 21,22ஆம் நாள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீலாய் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருப்பதாக நாகப்பன் ஆறுமுகம் சொன்னார்.
           இந்து சமயங்களில் தலைமைச் சமயமாக விளங்கும் சைவ சமயத்தின் மெய்ப்பொருள் உண்மைகளை அறிந்து கொள்வது இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.மேலும் முறையான கிரியைகளை அடையாளம் காணுதல், சைவ நன்னெறியை நம் வாழ்க்கையில் நெறியாக கடைபிடித்தல், இதன் மூலம் சமயச் சீர்கெடுகளை அடையாளம் கண்டு தீர்வு காணுதல், நம்பிக்கை சார்ந்த சமய நடைமுறைகளில் இருந்து அறிவு சார்ந்த வாழ்க்கைக்கு திரும்புதல் ஆகியவை இந்த மாநாட்டின் நோக்கமாகும் என்றார் அவர்.
          இந்த மாநாடு "நம்பிக்கை கடந்த நல்லறிவு" எனும் கருப்பொருளுடன் நடைபெறும் இம்மாநாட்டில் முனைவர்  நாகப்பன் ஆறுமுகம் "நம்பிக்கை கடந்த நல்லறிவு" எனும் தலைப்பில் ஆய்வுரையை வழங்குவார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வருகை தரு பேராசிரியர் முனைவர் அருணை பாலாறாயன் "தமிழர் சமய வரலாற்றில் தெய்வமும் கடவுளும்" எனும் தலைப்பில் ஆய்வுரை வழங்குவார். மேலும் திருமுறைப் பண்ணிசைமணி ஓதுவாமூர்த்தி சண்முக திருவரங்க யாயாதி திருமுறைகளில் சைவக் கிரியை எனும் தலைப்பில் ஆய்வுரை வழங்குவார். சிவத்திரு அன்பரசன் அருணாசலம் பெரியபுராணத்தில் அடியார் ஆற்றிய தொண்டும் ஈட்டிய பயனும் எனும் தலைப்பில் ஆய்வுரையை சிங்கப்பூரைச் சேர்ந்த சிவத்திரு செந்தில்குமரன் அமிர்தலிங்கம் ஆங்கிலத்தில் ஓர் ஆய்வுரையை வழங்கவிருப்பதாக முனைவர் நாகப்பன் ஆறுமுகம் குறிப்பிட்டார்.
         இந்த மாநாட்டின் தொடக்க விழா ஜூலை 21 சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு பங்கேற்பாளர் பதிவு நடைபெறும். அதன்பிறகு காலை 9.00 மணி முதல் காலை 11.00 மணிவரை மாநாட்டின் திறப்பு விழா நடைபெறும். நந்திக் கொடியேற்றம், சிவபூசையைத் தொடர்ந்து நம்பிக்கை கூட்டணித் அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்றத் தலைவர்களின் வாழ்த்தும் வரவேற்பும் நடைபெறும். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் பங்கேற்பாளர்கள் 100 வெள்ளி செலுத்த வேண்டும். வெளிநாட்டுப் பேராளர்கள் 30 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தில் இரண்டு நாட்களுக்கான உணவு, ஆய்வு மலர், கைப்பை, எழுது கருவிகள் ஆகியவை வழங்கப்படும். இந்த மாநாட்டில் கலந்து சைவ சமயத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுப் பயன்பெறுமாறு இந்துப் பெருமக்களை முனைவர் நாகப்பன் ஆறுமுகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments