3 லட்சம் இந்தியர்கள் நாடற்றவர்களா? நிரூபித்துக் காட்டுங்கள்! நான் பதவி விலகுகிறேன் டத்தோ டி.மோகன் சவால்

3 லட்சம் இந்தியர்கள் நாடற்றவர்களா?
நிரூபித்துக் காட்டுங்கள்!
நான் பதவி விலகுகிறேன்
டத்தோ  டி.மோகன் சவால்

கோலாலம்பூர், செப்டம்பர் 1-
      இந்திய சமுதாயத்தில் 3 லட்சம் பேர் நாடற்றவர்களாக இருக்கிறார்களா? நீங்கள் நிரூபித்துக் காட்டுங்கள். நான் பதவி விலகுகிறேன். அப்படி நீங்கள் நிரூபிக்கத் தவறினால் பதவி விலகத் தயாரா என்று செனட்டர் டத்தோ டி.மோகன் சவால் விடுத்துள்ளார்.   
           அரசியல் காரணங்களுக்காக முன்னாள் எதிர்கட்சியினரும், இந்நாள் ஆளுங்கட்சியினருமாகியவர்கள்  சொல்லி வந்தது  ஒரு மிகப்பெரிய பொய். இன்று அந்த பொய்யை உண்மையாக்க நினைத்து  சம்பந்தப்பட்டவர்கள்  மீண்டும், மீண்டும்  பொய்யுரைக்க வேண்டாம். 3 லட்சம்  இந்தியர்கள்   நாடற்றவர்கள் அல்லர். இந்த ஆண்டு  இறுதிக்குள் ஆளுங்கட்சி இந்தியத் தலைவர்கள் 3 லட்ச பேருக்கான ஆதாரங்களை  திரட்டினால் நான் பதவி விலகத் தயார்? அப்படி இல்லாவிட்டால் அவர்கள் பதவி விலகத் தயாரா? என்று டத்தோ டி.மோகன் சவால் விடுத்தார்.
        தேசிய முன்னணி ஆட்சிக்காலத்தில் 2010ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு  வரை  மஇகாவின் மைடப்தார் மூலம் நாடு தழுவிய நிலையில்  நடத்திய ஆய்வில் குடியுரிமை வேண்டி இந்தியர்கள்  12,726 பேர்  பதிவு செய்திருந்தனர்.  அதில் 7,126 பேருக்கான  குடியுரிமைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மீதமுள்ளவர்களின் ஆவணங்கள் மறுபரீசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதனைத்தொடர்ந்து மெகா மைடப்தார் வழி  1,638 பேருக்கு குடியுரிமை அளிக்கப்பட்டது. அதனையடுத்து 3,000 பேரின் ஆவணங்களும் பரிசீலனையில் இருந்த வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்றார் அவர்.
       மஇகாவைப் பொறுத்தவரையில் இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனையை களைய முழு மூச்சாக செயல்பட்டு வந்ததே தவிர இவர்களைப் போல் ஆதாரமில்லாமல் எண்ணிக்கையை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை.
100 நாட்களில் குடியுரிமை இல்லாத இந்தியர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்ற வாக்குறுதி என்னவானது? 100  நாட்கள் முடிந்து விட்ட நிலையில்  இந்த வருட இறுதிக்குள்ளாவது  இதற்கான தீர்வு பிறக்குமா? அதற்கான ஆதாரங்களை திரட்ட முடியுமா? என அவர் கேள்வி எழுப்பினார்.
        3,853 பேரின் ஆவணங்கள் மட்டுமே உள்துறை அமைச்சிடம் இருக்கிறது. 3 லட்சம் என்ற எண்ணிக்கை தவறு என்று  உள்துறை துணையமைச்சர் டத்தோ முகமட் அஜிஸ் பின் ஜமான் நாடளுமன்ற மேலவையில் பதிவு செய்துள்ளார். அந்த சூழலில் ஆளுங்கட்சி இந்தியத் தலைவர்களின்  அறிக்கை முன்னுக்குபின் முரணாக உள்ளது.
எது எப்படி இருந்தாலும் சரி, 100 நாட்களை கடந்து விட்ட நிலையிலும் வெறும் அறிக்கை வழி மீண்டும் மீண்டும் பொய்யுரைக்காது இந்தியர்களின்  குடியுரிமை பிரச்சனைக்கு என்ன வழி என்பதை சிந்திக்க வேண்டும்.
இன்றைய அரசாங்கத்தில் 4 அமைச்சர்கள் இருக்கிறார்கள். சமுதாயத்தை பிரதிநிதித்து அதிக அளவில்  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இணைந்து இந்தப்பிரச்சனையை தீர்க்க முடியாதா? சரியான ஆவணங்களை திரட்ட முடியாதா?
      தேசிய முன்னணி ஆட்சிக்காலத்தில் நாடற்றவர்களாக இருந்தவர்கள் காவல் துறையினரின் கைதுக்கு பயந்து பதிவு செய்ய  வரவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. அவ்வாறான சூழல் அன்று இல்லை. இருந்தாலும் ஒரு வேளை அந்தப்பிரச்சனை இருந்திருந்தால்  இன்றைய சூழலில்  அரசாங்கமும், ஆட்சியும், அதிகாரமும்
அவர்களிடம் இருக்கின்ற நிலையில் அதனை களைவதும், பொது மன்னிப்பு வழங்குவதும் எளிது என்றார் அவர்.
      அன்றைய எதிர்கட்சி இந்தியத் தலைவர்கள் சமுதாய   பிரச்சனைக்கு  எங்களோடு  இணைந்து வேலை செய்யவில்லை. ஆனால், இன்றைய காலக்கட்டங்களில்  நாங்கள்  இணைந்து வேலை செய்ய தயார் நிலையில் உள்ளோம். இன்னமும்  இந்தப்பிரச்சனையை அரசியல் கோணத்தில் பாராது இதற்கான தீர்விற்காக பாடுபடுங்கள். மீண்டும் மீண்டும் 3 லட்சம் இந்தியர்கள்  நாடற்றவர்கள் என்று சொல்லி மக்களை ஏமாற்ற நினைக்காதீர் என டத்தோ டி.மோகன் தமதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments