தனித்து வாழும் தாய்மார்களின் நலன் கருதி குளோ ஆசியா கல்லூரியின் தொழில்திறன் பயிற்சிகள் தொடரும்! கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ தகவல்

தனித்து வாழும் தாய்மார்களின் நலன் கருதி குளோ ஆசியா கல்லூரியின் தொழில்திறன் பயிற்சிகள் தொடரும்!
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ தகவல்

தேசம் குணாளன் மணியம்

கிள்ளான், ஆகஸ்டு 7-
           இந்தியப் பெண்கள் குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்கள் நலன் கருதி குளோ ஆசியா கல்லூரியுடன் இணைந்து தொழில்திறன் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.   


          இந்தியப் பெண்கள் குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்கள் தொழில் முனைவர்களாக உருவாக வேண்டும்.  இந்த நோக்கத்திற்காக பேஸ்ட்ரி மற்றும் பேக்கிரி பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அத்திட்டத்தை  குளோ ஆசியா தொழில்திறன் கல்லாரியின் பேஸ்ட்ரி, பேக்கிரி பயிற்சியின் மூலம் நிறைவேற்றி 20  தாய்மார்கள் மாத வருமானம் சம்பாதிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளதாக  கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.


       இந்த பேஸ்ட்ரி, பேக்கிரி பயிற்சி தனித்து வாழும் தாய்மார்களுக்காக வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற பெண்கள் அனிச்சல், பிஸ்கட் வகைகள், பலகார வகைகள் உள்ளிட்ட பல இனிப்பு பண்டங்களை தயார் செய்ய பழகிக் கொண்டனர். இந்த பயிற்சி குளோ ஆசியா பேஸ்ட்ரி, பேக்கிரி கல்லூரியில் 5 வாரம் பயிற்சியாக வழங்கப்பட்டு அவர்கள் பயிற்சியை முடித்துக் கொண்டதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் பயிற்சியை முடித்துக் கொள்ளவிருப்பதாகவம் குளோ ஆசியா கல்லூரியின் பேஸ்ட்ரி, பேக்கிரி கட்டட வளாகத்தை அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா செய்த போது தேசம் தொலைக்காட்சியிடம் சார்லஸ் சந்தியாகோ அவ்வாறு  கூறினார்.
           இத்தகைய பயிற்சி கிள்ளான், அண்டலாஸ், ரவாங் உள்ளிட்ட சில இடங்களில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கிய மானியம் வழி நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். இந்நிலையில்  குளோ ஆசியா கல்லூரி வழங்கி வரும்  தொழிற்திறன் பயிற்சிகள் பாராட்டுக்குரியது. இத்தகைய பயிற்சி வழி இளைஞர்கள் தங்களை   தொழில் முனைவர்களாக உருவாக்கிக் கொள்ள முடியும். எதிர்காலத்தில் குளோ ஆசியா கல்லூரியுடன் இணைந்து மேலும் பல பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ உறுதியளித்தார்.
           இந்த நிகழ்ச்சியில் சார்ல்ஸ் சந்தியாகோ குளோ ஆசியா கல்லூரியின் பேஸ்ட்ரி, பேக்கிரியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து பயிற்சி பெறும் குடும்ப மாதர்களை சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தார். அவரோடு குளோ ஆசியா கல்லூரியின் ஆலோசகர் ஐயப்பன் முனியாண்டி உடனிருந்தார்.

Comments