மக்களின் சுமையை குறைக்க டோட்டோ, கூடா, மெக்னம், பிக் சுவீப் உள்ளிட்ட அதிர்ஷ்ட எண்கள் விற்பனை நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படுமா? நாடாளுமன்ற மேலவையில் செனட்டர் டத்தோ டி.மோகன் கேள்வி

மக்களின் சுமையை குறைக்க
டோட்டோ, கூடா, மெக்னம், பிக் சுவீப் உள்ளிட்ட அதிர்ஷ்ட எண்கள் விற்பனை நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படுமா?
நாடாளுமன்ற மேலவையில் செனட்டர் டத்தோ டி.மோகன் கேள்வி

கோலாலம்பூர், செப்டம்பர் 4-
     அதிர்ஷ்ட இலக்க எண்கள் நிறுவனமான  டோட்டோ, கூடா, மெக்னம், பிக் சுவீப்  உள்ளிட்ட  குலுக்கல் எண்கள் நிறுவனங்கள் அனைத்தும்  ஒன்றிணைக்கப்பட்டால் மக்களின் சுமைகள் குறையும் என்பதால் அவை ஒரே எண் நிறுவனமாக்கப்படுமா என்று மேலவையில் செனட்டர் டத்தோ டி.மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
         இந்நாட்டில் அதிக அளவில் அதிர்ஷ்ட எண்கள் இருப்பது அவசியமற்றது.  இதனை அரசாங்கம் சீர் தூக்கி  பார்க்குமா? இந்த அதிர்ஷ்ட எண்கள் அனைத்தையும்  ஒன்றாக்குவது  எளிது. குலுக்களின் வழி ஒருவரின் வாழ்க்கைத்தரம் மாறுகின்ற அதே வேளையில் அதிக அளவிலான அதிர்ஷ்ட எண்களினால் ஏற்படும் மக்களின் சுமைகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
       இதனையடுத்து அவர் பேசுகையில்  கல்வித்துறை சார்ந்து மெட்ரிக்குலேசன் மற்றும் பொதுப் பல்கலைக் கழகங்களில் ஒதுக்கீட்டு  முறையை அகற்றி விட்டு தகுதிகளின் அடிப்படையை கொண்டு வந்தமையினை வரவேற்கின்ற அதே சூழலில்  இந்திய சமுதாய  மாணவர்களின் எண்ணிக்கைகள் குறையாத நிலைப்பாட்டை அரசாங்கம் உறுதி செய்தால் இந்திய  சமுதாயத்திற்கு நன்மை பயக்குமென அவர் சொன்னார்.
       அதுமட்டுமில்லாது தமிழ் இடை நிலைப்பள்ளிகளை உருவாக்குவதாக  பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளதை மறந்து விடாது நிறைவேற்ற வேண்டும்.  அதோடு அரசாங்க துறையில் இந்தியர்களுக்கு 10 சதவிகிதம்  வேலைவாய்ப்பு என்ற நிலைப்பாடும் நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் இந்திய சமுதாயத்திற்கு இவர்கள் அளித்துள்ள மற்ற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டுமெனஅவர் வலியுறுத்தினார்.
       மற்றுமொரு பிரச்சனையாக  இந்திய சமுதாய வணிகர்களின் துயராக அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனை உள்ளது. உணவங்கள், ஜவுளித்தொழில், இரும்பு மற்றும் உலோக மறுசுழற்சி கடைகள், முடி வெட்டும் தொழில், உள்ளிட்ட  தமிழக தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஆட்கள் பற்றாக்குறையினால் இந்திய சமுதாய வணிகர்கள் மிகப்பெரிய பாதிப்பை எதிர் நோக்கியுள்ளார்கள். இதற்கான தீர்வினை கொண்டு வருவதற்கும், இது சார்ந்த வழிமுறைகளை எளிதாக்குவதற்கும்  அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டும்.
பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்தால் பிரிம் உதவித்தொகைகள் நிறுத்தப்படாது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அவர்கள் பேசிய காணொளி மக்களிடத்தில் பரவியது.  ஆனால், இன்றைய நிலைப்பாட்டில் பிரிம் உதவித்தொகைகள் நிறுத்தப்படுமென சொல்லப்படுவது சரியானதல்ல.  பிரிம் உதவித் தொகைகள் நிறுத்தப்பட்டால் அது பலருக்கு சுமையைக் கொடுக்கும்.இதற்கான மாற்று வழியை அரசாங்கம் எடுக்க வேண்டுமென  நாடாளுமன்ற மேலவையில் டத்தோ டி.மோகன் பேசினார்.

Comments