தனியார் தொழிற்திறன் பயிற்சி மையங்களுக்கு மூடு விழா? நெருக்குதல் வழங்கி மூட வழி தேடுகிறாரா அமைச்சர் குலசேகரன்?

தனியார் தொழிற்திறன் பயிற்சி மையங்களுக்கு மூடு விழா?
நெருக்குதல் வழங்கி மூட வழி தேடுகிறாரா அமைச்சர் குலசேகரன்?

தேசம் குணாளன் மணியம்

கோலாலம்பூர், செப். 14-
       மனிதவள அமைச்சின் கீழ் இயங்கி வரும் தனியார் பயிற்சி மையங்களுக்கு  மூடு விழா நடத்த சாவு  அமைச்சர் மாண்புமிகு குலசேகரன் வழி தேடிக் கொண்டிருக்கிறாரா எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.
             தனியார் தொழில்திறன் பயிற்சி மையங்கள் தற்போது செயல்பட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். முந்தைய அரசாங்கத்தின்  நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துவதாக கூறியிருந்த அமைச்சர் குலசேகரன் இதுநாள் வரையில் அதன் நிலை குறித்து அறிவிக்கவில்லை. இதனால் தனியார் தொழில்திறன் பயிற்றுவிக்கும் கல்லூரிகள் குறிப்பாக இந்திய கல்லூரிகள் த த்தளித்து வருவதாக தேசம் வலைத்தளம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
               மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் பிடிபிகே (PTPK) எனப்படும் தொழில்திறன் பயிற்சி மைய கடனுதவி வாரியம்,  எச்.ஆர்.டி.எப் (HRDF) எனப்படும் மனிதவள மேம்பாட்டு நிதி வாரியம் கீழ் செயல்படும் தொழில் பயிற்சி மையம் போன்றவற்றின் செயல்பாடுகளை  விசாரணை நடத்துவதாக கூறி அதனை அமைச்சர் குலசேகரன் நிறுத்தி வைத்துள்ளதாக  அறிவித்திருந்தார். ஆனால், அது குறித்து இன்று வரையில் எந்தத் தகவலும் இல்லை. இதனால் 600க்கும் மேற்பட்ட தனியார் தொழில்திறன் பயிற்சி மையம், 800க்கும் மேற்பட்ட தனியார் தொழில்  பயிற்சி மையங்கள் ஆகியவை வாழ்வா? சாவா? என்ற நிலையில்  அபாய கட்டத்தில் இருக்கிறது.
             இந்த விவகாரம் குறித்து அண்மையில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளிவந்த போது அதற்கு விசாரணை இன்னும் முடியவில்லை என்று தமது அதிகாரிகள் மூலம் விளக்கமளித்த குலசேகரன் விசாரணை எப்போது முடியும் என்று கூறவில்லை. இதனால் இந்தியர், மலாய் கல்லூரிகள் என்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசம் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
      அது தற்காலிகமாக விசாரணைக்காக நிறுத்தி வைக்கபட்டுள்ளதாக கூறிய மாண்புமிகு அமைச்சர் குலசேகரன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது. விசாரணை நடக்கட்டும். புதிய திட்டங்களை தொடர வேண்டியதுதானே முறை? இந்த விசாரணைக்கும் தொழில்திறன் பயிற்சி நடத்துநர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அவர்களுக்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள குலசேகரன் ஏன் முட்டுக் கட்டையாக இருக்கிறார்?  இந்த தொழில்திறன் பயிற்சி மையங்களை நிரந்தரமாக குழிதோண்டி புதைத்து மூடு விழா நடத்த அமைச்சர் குலசேகரன் வழிதேடுகிறாரா என்று சம்பந்தப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
      குலசேகரன்  நடவடிக்கையால் 10 ஆயிரம் மாணவர்களும் 1,500க்கும் மேற்பட்ட தனியார் தொழில் பயிற்சி மையங்கள் பெரும்  பாதிப்புக்குள்ளாயின. இந்த தனியார் தொழில்திறன் பயிற்சி மையங்களை 80 விழுக்காட்டு இந்தியர்கள் நடத்தி வருகின்றனர். அவர்களை வீதிக்கு கொண்டு வருவதற்கு குலசேகரன் திட்டம் தீட்டி வருவதாக அவரின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. ஆகையால், தொழில்திறன் பயிற்களை நடத்த குலசேகரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் தொழில்திறன் பயிற்சி நடத்துநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments