பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பு! எதிர்கால நலனுக்காக மஇகா நடவடிக்கை! டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தகவல்

பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பு!
எதிர்கால நலனுக்காக மஇகா நடவடிக்கை!
டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தகவல்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், செப்.13-
          மஇகா எதிர்கால நலனுக்காக பாஸ் கட்சியுடன் இணைந்து செயல்படத் தயாராகியுள்ளதாக அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கூறினார்.

  •           மஇகாவை எதிர்காலத்தில் வலுவான கட்சியாக உருவாக்கும் நோக்கத்தில் மஇகா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பாஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதும் அடங்கும் என்று மத்திய செயலவை கூட்டத்தின் போது டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

        இந்து ஆலயங்கள், மத விவகாரங்களில் பாஸ் கட்சி தலையிடாது என்ற அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி ஹடி அவாங்கின் வாக்குறுதி நம்பிக்கையை ஏற்படுத்தியதால் அக்கட்சியுடன் ஒத்துழைப்பு வழங்க மஇகாவுக்கு பிரச்சினை இருக்காது என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கூறினார்.
         பாஸ் கட்சி மதம் சார்ந்த கட்சியாக இருந்தாலும் அது இந்துக்களை பாதிக்காது. ஹூடுட் சட்டம் முஸ்லீம்களுக்கு மட்டுமே. இதில் மற்ற மதம் சார்ந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று டத்தோஸ்ரீ ஹாஜி ஹடி அவாங்கை நேரில் சந்தித்த போது அவர் வாக்குறுதி வழங்கியிருந்தார் என்று மத்திய செயலவை கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் அவ்வாறு சொன்னார்.
          கடந்த காலங்களில் பாஸ் கட்சியுடன் பேசியதை கிடையாது. அதன் நிலைப்பாடு என்ன என்றும் தெரியாது. இப்போது பாஸ் கட்சித் தலைவரை நேரில் சந்தித்த போதுதான் அவர் பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.
        இந்துக்கள், ஆலய விவகாரங்களில் பாஸ் கட்சி தலையிடாது.  இந்துக்கள் மனம் புண்படும்படி நாங்கள் பேச மாட்டோம். அதேநேரத்தில் புத்த மதம், சீன மதம் என்று மற்ற மாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று ஹடி அவாங் வாக்குறுதியளித்திருந்தார். ஆகையால், நாங்கள் பாஸ் கட்சியோடு ஒத்துழைக்கத் தயாரானதாக டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.
        மஇகா எதிர்காலத்தில் ஒரு வலுவான  கட்சியாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் மஇகா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பு வழங்குவதும் அடங்கும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கூறினார்.
         எனினும் எதிர்காலத்தில் பாஸ் கட்சியின் ஹூடுட் போன்ற சட்டதிட்டங்கள் இந்துக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து மஇகா வழக்கறிஞர் ஆய்வு மேற்கொள்வார் என்று மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

Comments