போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் அம்னோ படுமோசமாக தோல்வி காண வேண்டும்! சுயேட்சை வேட்பாளர் டத்தோ குமார் அமான் வலியுறுத்து

போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் அம்னோ படுமோசமாக தோல்வி காண வேண்டும்!
சுயேட்சை வேட்பாளர் டத்தோ குமார் அமான் வலியுறுத்து

கோலாலம்பூர், செப்.21-
           போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் அம்னோ படுமோசமாக தோல்வி காண வேண்டும் என்று சுயேட்சை வேட்பாளர் டத்தோ ஜி.குமார் அமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
         இந்த இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி அபார வெற்றி பெற வேண்டும். நான் தேசிய முன்னனியால் தூண்டிவிடப்பட்டுள்ளதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மை அதுவல்ல. போர்ட்டிக்சனில் நம்பிக்கை கூட்டணி அபார வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், அம்னோ படுதோல்வியடைய வேண்டும் என்று முன்னாள் ம இ கா தலைமை செயலாளரான குமார் அமான் தெரிவித்தார்.
          மஇகா மற்றும் பாஸ் கட்சி அத்தேர்தலில்  இருந்து விலகிக் கொண்டுள்ளன. நம்பிக்கை தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் மோத மறுத்து விட்டனர். இந்நிலையில் லிங்கி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் ரஹ்மான் முகமட் ரெட்ஷா அம்னோ சார்பில் போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. இதில் அம்னோ படுதோல்வி அடைய வேண்டும். எனினும் இதுவரை அம்னோ வேட்பாளர் யார் என்று தெரியவில்லை என்றார் டத்தோ குமார் அமான்.
            போர்ட்டிக்சன் வாக்காளர்களுக்கு நம்பிக்கை கூட்டணியின் தற்போதைய ஆட்சியில் மனநிறைவு இல்லை. தேசிய முன்னனி அரசாங்கம் போலவே நம்பிக்கை கூட்டணியும் வெற்று வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி விட்டதாக கடந்த தேர்தலில் தானா ராத்தா சட்டமன்றத் தொகுதியில் பாஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட டத்தோ குமார் அமான் சொன்னார்.
             இதனால் அம்னோவை பிடிக்காவிட்டாலும் அம்னோ வேட்பாளருக்கு ஒரு சில வாக்காளர்கள் வாக்களிக்கலாம். இவர்கள்தான் எனது இலக்கு. இதில் குறிப்பாக 12 ஆயிரம் இந்திய வாக்காளர்களை கவரவே தாம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதாக குமார் அமான் குறிப்பிட்டார்.
         நான் வெற்றி பெற்றால் நடப்பு அரசாங்கத்திற்கு குறிப்பாக 4 இந்திய அமைச்சர்களுக்கு நெருக்குதல் கொடுப்பவனாக நான் இருப்பேன் என்றார் டத்தோ குமார் அமான்.
           போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டன்யால் பாலகோபால் அப்துல்லா கடந்த செப்டம்பர் 12ஆம் நாள் டத்தோஸ்ரீ அன்வாருக்காக அத்தொகுதியில் இருந்து ராஜினாமா செய்தார். கடந்த தேர்தலில் டன்யாலுக்கு 36,225 வாக்குகள் கிடைத்தன. தேசிய முன்னனி வேட்பாளருக்கு 18,515 வாக்குகளும் பாஸ் கட்சி வேட்பாளருக்கு 6,594 வாக்குகளும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments