இந்தியாவிற்கான விசா கட்டண உயர்வு! தன்னார்வ குழு இந்திய தூதரிடம் கோரிக்கை மனு!

இந்தியாவிற்கான விசா கட்டண உயர்வு! தன்னார்வ குழு இந்திய தூதரிடம் கோரிக்கை மனு!

நமது நிருபர்

கோலாலம்பூர், செப்.9-     
           இந்தியாவிற்கான விசா கட்டணம் கடந்த ஜுலை மாதத்தில் இருந்து 462 வெள்ளியாக உயர்வு கண்டது.
      இந்த விசா கட்டணம் அதற்கு முன்பு 194.56 வெள்ளியாக இருந்தது. இது 6 மாத தவணைக்கான கட்டணமாகும். இந்த கட்டணம் ஓராண்டு தவணை என்ற விதிமுறையில்  462.56 வெள்ளியாக உயர்த்தப்பட்டது.
        இந்த விசா கட்டணம் திடீரென்று  பெரிய அளவில் உயர்வு கண்டுள்ளது குறித்து மலேசியர்கள் குறிப்பாக மலேசிய இந்தியர்கள் மத்தியில் கடுமையான ஆட்சேபமும்  அதிருப்தியும் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்தில்   150 பொது இயக்கங்களின் பிரதிநிதிகள் ஒன்று கூடி *இந்தியக் விசா தன்னார்வக் குழு* என்ற ஒரு குழுவை அமைத்து கலந்துரையாடல் நடத்தினர்.
           இந்த கலந்துரையாடலில்  கட்டண உயர்வு குறித்து இந்திய தூதரகத்திடம் ஒரு கோரிக்கை மனுவை வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
         அந்த வகையில் கடந்த செப்டம்பர் 7ஆம் நாள் துணை நிலை தூதர்  நிக்லேஷ் சந்திர கிரியை  தன்னார்வ குழு பிரதிநிதிகள் கோகிலன்,  பாலமுரளி, பி.டி.கானா,  பாத்திமா சஷ்னா ஆகியோர் சந்தித்தனர்.  30 நிமிடங்கள் நடந்த  இச்சந்திப்பில் கோரிக்கை மனுவின் சாரம்சம் குறித்து அவரிடம்  எடுத்துரைகப்பட்டது.
கோரிக்கை மனுவில் இந்திய நாட்டுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் மலேசிய இந்தியர்கள்தான் என்றும் இவர்கள் பெரும்பாலும் தங்கள் மூதாதையர் மண்ணை காணவும் உறவுகளை சந்திக்கவும்தான் செல்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார வலு இல்லாத நிலையில் இருப்பதால் அதிகப்படியான கட்டண உயர்வு இவர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்றும் எடுத்துச் சொல்லப்பட்டது. குறைந்த கட்டண விமான சேவைகள் பெருமளவில் அறிமுகப்படுத்த பின்னர்தான் அதிகப்படியான மலேசிய மக்கள் இந்திய நாட்டுக்கு பயணம் செய்ய தொடங்கினர், இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள விசா கட்டணம் ஏறத்தாழ விமான கட்டண அளவுக்கு இருப்பதால் பயணங்கள் வெகுவாக பாதிப்படையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இந்திய பயணம் மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் 10-20 நாட்கள் மட்டுமே தங்குவதால் 1வருட தவணை தேவையற்றது என்று வலியுறுத்தப்பட்டது.
       கட்டண உயர்வை மீட்டுக் கொண்டு குறுகிய கால பயணத்திற்கு மியன்மார் மற்றும் இந்தோனேசியாவுக்கு விசா இல்லாத பயண வாய்ப்பு இருப்பது போல மலேசியர்களுக்கும் வழங்க இந்திய அரசாங்கம் முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இது இந்திய பயணம் மேற்கொள்ளும் 500,000-க்கும் குறையாத மலேசியர்களுக்கு பயனாக அமையும்.
சுற்றப்பயணிகளின் நலனுக்காகவும் வசதிக்காகவும் மலேசிய அரசாங்கத்துடன் பேச்சு  நடத்த இந்திய அரசு தயாராக இருப்பதாக துணை நிலை தூதர் தெரிவித்தார்.
        மனுவையும் சந்திப்பு குறிப்புகளையும் இந்திய அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதாக துணை நிலை தூதர் உறுதியளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில்  வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு டத்தோ சைபுடின் அப்துல்லாவை சந்திக்க தன்னார்வ குழு முடிவு செய்துள்ளனர்.
 இந்திய விசா தன்னார்வ குழு
கோகிலன் 010 2522 557
பாலமுரளி 013 6320 587

Comments