144 ஆண்டுகள் பழைமையான சீ பீல்டு ஆலயத்தைக் காப்பாற்ற நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் முன் வராதது ஏன்? மஇகா பிரசாத் கேள்வி

144 ஆண்டுகள் பழைமையான சீ பீல்டு ஆலயத்தைக் காப்பாற்ற நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் முன் வராதது ஏன்?
மஇகா பிரசாத் கேள்வி

குணாளன் மணியம்

கோலாலம்பூர், அக்.16-   
            நாட்டில் 144 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிலாங்கூர் சீ பீல்டு ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்ற நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் முன் வராதது ஏன் என்று தேசிய மஇகா இளைஞர் பகுதியின் சமூகநல பிரிவின் தலைவர் பிரசாத் சந்திரசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


          நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சியில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு அதிகாரத்தில் இருக்கும் சீ பீல்டு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் உடைக்கப்படும் அபாயத்தில் இருப்பது தெரிந்திருந்தும் நம்பிக்கை கூட்டணி அரசாங்க இந்திய பிரதிநிதிகள் வாய்மூடி அமைதி காப்பது ஆயிரம் கேள்வி கணைகளை எழுப்பியுள்ளதாக பிரசாத் கூறினார்.
         இந்த ஆலயம் உடைபடும் அபாயத்தில் இருப்பது அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த ஆலயத்தை உடைத்து அகற்ற வேண்டும் என்று நில மேம்பாட்டாளர்  மாநகர் மன்றம், சிலாங்கூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்பில் முயன்று வருகிறார். ஆனால், இது குறித்து நம்பிக்கை கூட்டணியின் இந்திய அரசாங்க பிரதிநிதிகள் அனைவரும் மௌனம் சாதித்து வருவது 144 ஆண்டுகால சாம்ராஜ்யம் அழிந்துவிடக்கூடும் என்று நினைக்கும் போது  மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
           இந்த சீ பீல்டு ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தை அகற்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், மஇகா இளைஞர்கள், அரசு சாரா இயக்கங்கள், வட்டார மக்கள் நடத்திய போராட்டத்தில் அது நிறுத்தப்பட்டுள்ளது.
             இந்த ஆலயத்தை 2007இல் வரலாற்றுப் பூர்வ இடமாகக் கருதி அரசாங்க பதிவேட்டில்  பதிவு செய்ய தேசிய முன்னனி அரசாங்கம் சட்டமசோதாவை நிறைவேற்றியது. ஆனால், 2008இல் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அந்த சட்டமசோதாவை ரத்து செய்தது. இந்நிலையில் அந்த ஆலய நிலத்தை மேம்பாட்டாளர் வாங்கி விட்டார்.
       இந்த ஆலயப் பிரச்சினை குறித்து நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் இந்தியப் பிரதிநிகள் யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்பது அதிர்ச்சியளித்துள்ளது
          நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் ஆலய உடைப்பு இருக்காது என்று வாக்குறிதியளித்தார்கள். ஆனால், அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இது ஏன்? இந்திய அமைச்சர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அள்ளி வீசிய மக்கள் கூட்டணி இந்திய பிரதிநிதிகள்  இப்போது மௌனித்திருப்பது வருத்தமளிப்பதாக அவர் சொன்னார்.
           இந்நாட்டில் 144 ஆண்டு வரலாற்றைக் கொண்ட  சீ பீல்டு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்ற நம்பிக்கை கூட்டணி அரசாங்க இந்தியப் பிரதிநிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரசாத் வலியுறுத்தினார்.
        இந்த ஆலயத்தின் சிலைகளை  அக்டோபர் 17 உடைக்கப் போகிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. ஆங்கிலேயர்கள் அனுமதி வழங்கி சுற்று வட்டார மக்கள் சமய நெறியோடும், பக்தி நெறியோடும் வாழக் காரணமாய் இருந்த இந்த ஆலயம் காணாமல் போகும் அபாயம் உள்ளது. பலமுறை பல அரசியல் தலைவர்கள், சமுக ஆர்வலர்கள் காப்பாற்றிய இந்த ஆலயத்தை  பொதுமக்களாகிய நாம்தான் காப்பாற்ற வேண்டும். அரசியல் கருத்து வேறுபாட்டை தள்ளிவைத்து, அனைவரும் சமய அடிப்படையில் ஒன்று சேர்ந்து களம் இறங்குவோம். அனைவரும் ஒன்று திரண்டு, ஆலயத்தில் கூடி நமது தெய்வத்தைக் காப்பாற்றுவோம் என்று பிரசாத் கேட்டுக் கொண்டார்.

Comments