மலிவு விலை சாராயம், சம்சு விவகாரம்! நகராண்மைக்கழகம், மாவட்ட மன்றங்கள் அமலாக்க நடவடிக்கையை அதிகரிக்க வேண்டும்! சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் வலியுறுத்து

மலிவு விலை சாராயம், சம்சு விவகாரம்! நகராண்மைக்கழகம்,  மாவட்ட மன்றங்கள் அமலாக்க நடவடிக்கையை  அதிகரிக்க வேண்டும்!
சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் வலியுறுத்து

குணாளன் மணியம்

கிள்ளான், அக்.3-
           நாட்டில் தலைதூக்கியிருக்கும் பல உயிர்களைப் பலிகொண்ட கள்ளச் சாராயம், மலிவு விலை சம்சு தொடர்பில் நகராண்மைக்கழகம், மாவட்ட மன்றங்கள் சட்ட அமலாக்க நடவடிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் வலியுறுத்தியுள்ளார்.
          மலிவு விலை மதுபானங்கள் தொடர்பில் சுங்க இலாகா 6 மாதத்திற்கு ஒரு முறைதான் அமலாக்கம் தொடர்பான சந்திப்புகளை நடத்துகிறது. இந்த சட்ட அமலாக்க சந்திப்புகள் அடிக்கடி நடந்தால் மலிவு விலை சம்சு, கள்ளச் சாராயங்களை துடைத்தொழிக்க முடியும் என்று குணராஜ் கூறினார்.
            இந்த மலிவு விலை சாராயத்தை குடித்த பலர் அண்மையில் பலியாகியிருந்தனர். இவர்கள் ஏன் பலியானார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் அருந்திய மதுபானம் மலிவு விலைச் சாராயம் என்று தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் சுங்க இலாகா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குணராஜ் கேட்டுக் கொண்டார்.
             சிலாங்கூர் மாநிலத்தில் குறிப்பாக கிள்ளானில் 1 வெள்ளி 50 காசு, 2 வெள்ளி 50 காசு, 5 வெள்ளி் என்று  குறைந்த விலையிலான சம்சு, கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடைகளில் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அது அசலானது என்று கருதி வாங்குகிறார்கள். சுங்க இலாகாவின் முத்திரையும் ஒட்டப்பட்டுள்ளதால் பாமரமக்கள் ஏமாறுகிறார்கள். இவர்களால் உயர்தர மதுபானங்களை வாங்க முடியாத காரணத்தினால் மலிவு விலை மதுபானங்களை வாங்குகிறார்கள். இதனை சுங்க இலாகா கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குணராஜ் குறிப்பிட்டார்.

Comments