உழுவதற்கும் அறுவடைக்கும் வேறுபாடு தெரியாத குணராஜ் ஹிண்ட்ராஃப் சிலாங்கூர் தலைவர் மணிமாறன் கண்டனம்

உழுவதற்கும் அறுவடைக்கும் வேறுபாடு தெரியாத குணராஜ்
ஹிண்ட்ராஃப் சிலாங்கூர் தலைவர் மணிமாறன் கண்டனம்

கோலாலம்பூர், அக்.2-
          நிலத்தில் உழுவதற்கும் விளைந்தபின் அறுவடை செய்வதற்கும் வேறுபாடு தெரியாத பிகேஆர் கட்சியின் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ்,  பழம் தருகின்ற மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டும் நன்றி கெட்ட தனத்தை வெளிப்படுத்துகிறார் என்று ஹிண்ட்ராஃப் சிலாங்கூர் மாநிலத் தலைவர் சி.மணிமாறன் சாடியுள்ளார்.
          சமுதாய மறுமலர்ச்சி இயக்கமாக விளங்கிய ஹிண்ட்ராஃப், சீராகவும் செம்மையாகவும் வளர்ந்து தற்பொழுது ஓர் அரசியல் கட்சியாக பரிமாணம் அடையும் நிலையில், அதை மலேசிய இந்திய சமுதாய எல்லையைக் கடந்து பொதுவாக மலேசிய அரசியல் வட்டத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் வரவேற்று ஆதரவு தெரிவிக்கும் நிலை கண்டு, பிகேஆர் கட்சி இந்தியர்கள் மனம் பொறுமினால், அது அவர்களின் பாடு; ஆனால், அக்கட்சியின்
சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், ஹிண்ட்ராஃப்  இயக்கம் இந்திய சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதாகவும் யாரோ ஏர் உழுத நிலத்தில் அறுவடைக்கு வந்துவிட்டதாகவும் கடந்த வாரம், இணைய ஊடகத்தின் வழி தன் மன எரிச்சலை வெளிப்படுத்தி இருப்பது, அவரின் பண்பு கெட்ட அரசியலை வெளிப்படுத்துகிறது.
           கடந்த 2008-இல் நிகழ்ந்த அரசியல் மறுமலர்ச்சி, தொடர்ந்து 2013ஆம் ஆண்டில் எழுந்த அரசியல் எழுச்சி மூலம் இரு தவணை பினாங்கு சட்டமன்றத்தில் உறுப்பியம் பெற்றிருந்த ஆர்.எஸ்.என். ராயர், இந்த ஆண்டு மே திங்கள் 9-ஆம் நாள் மலேசிய அரசியலில் நிகழ்ந்த அரசியல் பேராழி மூலம் நாடாளுமன்றத்தில் நுழைந்து தன் அரசியல் பணியைத் தொடர்கிறார்.
          அப்படிப்பட்ட ராயர், அண்மையில் மின்னல் வானொலியின் காலைக் கதிர் நிகழ்ச்சியில் அளித்த ஒரு நேர்காணலின்போது, மலேசியாவில் தற்பொழுது நிகழ்ந்திருக்கும் அரசியல் மாற்றங்களுக்கெல்லாம் அடிப்படை ஹிண்ட்ராஃப் இயக்கம்தான் என்று நெஞ்சார சொல்லி, ஜசெக சார்பில் தன் நன்றிதனை வெளிப்படுத்தி இருக்கிறார். அதுதான், உண்மைக்கும் நேர்மைக்கும் அழகு.
            ஆனால், மலேசிய இந்திய சமுதாயத்திற்கு யார் என்றே தெரியாமல் இருந்த குணராஜ், ஹிண்ட்ராஃப் இயக்கம் கண்ட எழுச்சியின் காரணமாக கடந்த பன்னிரண்டாவது பொதுத் தேர்தலின்போது ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால், குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தை மக்கள் கூட்டணி கைப்பற்றியதால் செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினராகும் வாய்ப்பைப் பெற்றார்.
தற்பொழுது செந்தோசா தொகுதில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றிருக்கும் இவர், ஹிண்ட்ராஃப் எந்தத் தொகுதியில் யாருக்காகப் பிரச்சாரம் செய்தது என்று கேட்டுள்ளார்.
14-ஆவது பொதுத் தேர்தல் காலத்திலும் அதற்கு முன்பும் நாடு முழுவதிலும் குறிப்பாக தீபகற்ப மலேசியாவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி, ‘தேசிய முன்னணிக்கு சுழியம் வாக்கு’ என்ற கருத்தை முன்வைத்து வாக்காளர்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டதுடன் நம்பிக்கைக் கூட்டணிக்கு பெருவாரியான ஆதரவையும் திரட்டியது ஹிண்ட்ராஃப். ஹிண்ட்ராஃப் இயக்கத்தினரும் ஆதரவாளர்களும் இரவு பகல் பாராமல் தேர்தல் களத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டது, குணராஜுக்கும் சேர்த்துதான் என்பதை இவர் எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டார்.
           ஹிண்ட்ராப் தலைவர் போட்டியிடுவதற்காக ஒரு தொகுதிகூட நம்பிக்கைக் கூட்டணி சார்பில் ஒதுக்கப்படவில்லை என்பதை அரசியல் நாகரிகமும் நன்றி பாராட்டும் பண்பும் இல்லாத குணராஜ் எண்ணிப்பார்க்கவில்லை.
         ஆனால், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைந்தபின், அக்கூட்டணியின் தலைமை சார்பில் நாடாளுமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு,  அதன்வழி அமைச்சரான தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சரைப் பார்த்து, வேதமூர்த்திக்கு இன்னும் என்ன வேண்டும் என்று கேட்கிறார். அத்துடன், இந்திய சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
         பிரதமர் துறை அமைச்சர், “மற்ற கட்சிகளில் உறுப்பினராக உள்ள எவரும் மலேசிய முன்னேற்றக் கட்சிக்கு வர வேண்டாம்” என்று ஏற்கெனவே பலமுறை சொல்லிவிட்டார். தவிர, குணராஜ் ஒரு கட்சியின் உறுப்பினராக இருந்து கொண்டு இன்னொரு  கட்சியை எப்படி விமர்சிக்க முடியும் என்று வினா தொடுத்துள்ள மணிமாறன், எல்லாவற்றுக்கும் மேலாக, அரசியல் சாசனப்படி இந்த நாட்டில் உள்ள எவரும் அரசியல் கட்சியை தொடங்க முடியும் என்றார்.
        அறுபது ஆண்டுகளுக்குப் பின் இந்த நாட்டில் அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்வதற்குக் காரணமான ஹிண்ட்ராஃப் இயக்கம் அரசியல் கட்சியாக மாறினால், அது எப்படி இந்திய சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதாகும். அரசியல் ஞானமும் தெளிந்த சிந்தனையும் இல்லாத குணராஜ், இந்தியர்களுக்கு பிகேஆர்-தான் குடைபோன்ற அமைப்பு என்னும் பொய்யையும் மனதார சொல்லி இருக்கிறார். உண்மையச் சொல்ல வேண்டுமென்றால், ஏர் உழுததும் நிலத்தைப் பண்படுத்தி நாற்று நட்டு அறுவடைக்குத் தயார் செய்ததும் ஹிண்ட்ராஃப் இயக்கம்தான். அதன் பலனை அலுங்காமல் குலுங்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் குணராஜ், ஹிண்ட்ராஃபை விமர்சிப்பததை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நிறைவாக, ஒன்றே ஒன்று; ஹிண்ட்ராஃப் இல்லை என்றால் இந்த குணராஜ் இல்லை; அப்படிப்பட்ட ஹிண்ட்ராஃப், இந்திய மக்களின் பேராதரவுடன் குறிப்பாக பாட்டாளிப் பெருமக்களின் துணையுடன் வளர்ச்சி அடைவதைக் கண்டு இவர் மனம் சுருங்கிப் போனால் அதைப்பற்றி  எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால், வஞ்சகத்தை வெளிப்படுத்தும் நஞ்சு மனம் குணராஜுக்கு கூடவேக் கூடாதென்று  மணிமாறன் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments