கிள்ளான், செந்தோசாவில் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண வடிகால், நீர் பாசான துறையுடன் பேச்சு! சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் தகவல்

கிள்ளான், செந்தோசாவில் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண வடிகால், நீர் பாசான துறையுடன் பேச்சு!
சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் தகவல்

குணாளன் மணியம்

கிள்ளான், அக்.12-
          கிள்ளான், செந்தோசா பகுதியில் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண வடிகால் நீர் பாசான துறையுடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் கூறினார்.

            தற்போது மழைக் காலமாக இருப்பதால் ஆங்காங்கே குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கிள்ளான் நகரன் வெள்ளத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இதில் செந்தோசா பகுதியில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

          செந்தோசா பகுதியில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பில் வடிகால், நீர் பாசான துறையுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆற்றை ஆழப்படுத்தி, அகலப்படுத்தும் நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும். அதேநேரத்தில் செந்தோசா பகுதி முழுவதும் தேவைப்படும் இடங்களில் கால்வாய்  நிர்மாணிப்பது, ஏற்கெனவே இருக்கும் கால்வாயை மறுசீரமைப்பது, சுத்தப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று குணராஜ் சொன்னார்.
            செந்தோசாவில் வெள்ளம் ஏற்படுவதற்கு  மக்களும் ஒரு காரணமாக இருக்கின்றனர். குப்பைகளை ஆற்றிலும் கால்வாயிலும் வீசுவதால் அது அடைத்துக் கொண்டு நீர் மட்டம் உயர வழிகாண்கிறது. ஆகையால், மக்கள் குப்பைகளை ஆற்றிலும் கால்வாயிலும் வீசுவதை தவிர்க்க வேண்டும். அவர்கள் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நடந்து கொள்ள வேண்டும் என்று குணராஜ் கேட்டுக் கொண்டார்.
           செந்தோசா பகுதியை மறுசீரமைப்பது குறிப்பாக கால்வாய் பகுதிகளை சீரமைப்பது குறித்து கிள்ளான் மாநகராண்மைக்கழகத்திடம் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. ஆகையால், செந்தோசா வெள்ளப் பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு காணப்படும் என்று ஜி. குணராஜ் உறுதியளித்தார்.
           இதனிடையே, செந்தோசா பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து கண்காணிக்க குணராஜ் மழையையும் பொருட்படுத்தாமல் நேரடியாக களமிறங்கி மக்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments