மஇகா தேசிய துணைத் தலைவரானார் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கட்சியை வலுப்படுத்த பாடுபட போவதாக உறுதி

மஇகா தேசிய துணைத் தலைவரானார் டத்தோஸ்ரீ எம்.சரவணன்
கட்சியை வலுப்படுத்த பாடுபட போவதாக உறுதி

குணாளன் மணியம்

கோலாலம்பூர், அக்.21-   
            மஇகா தேசியத் துணைத் தலைவர் தேர்தலில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வெற்றி பெற்றுள்ளார்.
     இந்த வெற்றியானது மஇகாவை வலுப்படுத்தும் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரனோடு இணைந்து செயல்பட வகை செய்யும் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
          மஇகா தலைமையகத்தில்  தேர்தல் ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஜி.ராஜூ மஇகா தேர்தல் குறித்த  அதிகாரப்பூர்வ  முடிவுகளை அறிவித்த பிறகு டத்தோஸ்ரீ எம்.சரவணன் செய்தியாளர்களிடம் அவ்வாறு சொன்னார்.   
           மஇகாவில் பதவி வகிப்பவர்கள் மட்டுமன்றி எல்லா தரப்பினரும் கட்சியை வலுப்படுத்த வேலை செய்ய வேண்டிய நேரம் இது. நாடு தழுவிய நிலையில் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி ஆகிய முன்று பிரிவுகளும் மஇகாவை வலுப்படுத்த பாடுபட வேண்டும். மஇகா தேசியத் துணைத் தலைவர் என்ற நிலையில் கட்சியை வலுப்படுத்தும் கடப்பாடு எனக்கு இருக்கிறது. கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரனுடன் இணைந்து மஇகாவின் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி தொடங்கி அடிமட்ட உறுப்பினர்கள் வரையில் கட்சியை வலுப்படுத்த களமிறங்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் கேட்டுக் கொண்டார். 
          மஇகா தேசிய   துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வெற்றி வாகை சூடியுள்ளார். டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு 9,391 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டான்ஸ்ரீ ராமசாமிக்கு 5,270 வாக்குகளும் கிடைத்தன.  இதன்வழி அடுத்த 3 ஆண்டுகளுக்கு அதாவது 2018 தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மஇகா தேசியத் துணைத் தலைவராக பதவி  வகிப்பார்.
             டத்தோஸ்ரீ எம்.சரவணன் அரசியலுக்கு வந்த நாள் முதல் பல சர்ச்சைகளில்  சிக்கிய நிலையில் தேர்தல் நடந்து முடிந்த பிறகும் சமூகவலைத் தளங்களில் சர்ச்சைக்குள்ளானார். டத்தோஸ்ரீ எம். சரவணனை ஒழித்து கட்ட வேண்டும் என்று ஒரு கும்பல் பல காணொளிகளை சமூகவலைத்தளங்களில் பரப்பினாலும்கூட அனைத்தையும் முறியடித்து தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராகவும் மஇகா தேசியத் துணைத் தலைவராகவும்  டத்தோஸ்ரீ எம் சரவணன் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments