செடிக் நிதியுதவி இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர புதிய அணுகுமுறை! அமைச்சர் வேதமூர்த்தி தகவல்

செடிக் நிதியுதவி இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர புதிய அணுகுமுறை!
அமைச்சர் வேதமூர்த்தி தகவல்

குணாளன் மணியம்

ரவாங், அக். 8-
             தேசிய முன்னனி ஆட்சியின் போது தொடங்கப்பட்ட செடிக் நிதியுதவி இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர புதிய அணுகுமுறை கையாளப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறியுள்ளார்.
           நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் செடிக் திட்டத்தை தேவைப்படும் மக்களுக்கு வழங்க இலக்கு கொண்டுள்ளது. இந்த செடிக் பணம் இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர புதிய அணுகுமுறையை செயல்படுத்த தாம் திட்டமிட்டுள்ளதாக ரவாங்கிங் தெலுங்கு சங்கத்தின் ஆண்டு கூட்டத்தை தொடக்கி வைத்த  போது செய்தியாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.
          செடிக் பணம் அரசாங்க சார்பற்ற சில இயக்கங்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால், அந்த இயக்கங்கள் மேற்கொண்ட திட்டங்கள் நன்மையைக் கொண்டு வந்ததா  எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதில் முந்தைய செடிக் அமலாக்க பிரிவு சிலருக்கு வழங்கியிருந்த பணம் மீதான கோப்புகளை பார்த்தேன். அதில் இதுவரை கேள்விப்படாத பல திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். அதேநேரத்தில் புதிய அணுகுமுறையில் செடிக் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் வேதமூர்த்தி சொன்னார்.
         இதனிடையே, தேசிய முன்னனி அரசாங்கம் ஆட்சியின்  போது பல இயக்கங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 200 கோடி வெள்ளி செடிக் பணம் முறையாக கையாளப்பட்டதா என்பதற்கான பதில் தேசிய தணிக்கை வாரியத்தின்  விசாரணைக்குப் பிறகு தெரியவரும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அண்மையில்  கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments