சீபில்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு வேண்டும்! எம்.ஜி. விஜய் ஆனந்த் வேண்டுகோள்

சீபில்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு வேண்டும்!
எம்.ஜி. விஜய் ஆனந்த் வேண்டுகோள்

குணாளன் மணியம்

சுபாங் ஜெயா, அக்.21-
           நாட்டில் 147 ஆண்டு பழைமை வாய்ந்த சீபில்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம் தொடர்பில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று எம்.ஜி.விஜய் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார். 

              இந்த ஆலய விவகாரம் தொடர்பில் நாளை அக்டோபர் 22 திங்கட்கிழமை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரியுடன் பேச்சு நடத்தப்படவுள்ளதால் இவ்விவகாரம் தொடர்பில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று விஜய் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
            இந்த ஆலய விவகாரம் தொடர்பில் இந்துக்கள்  மனவேதனை அடைந்துள்ளனர். ஒரு சிலர் கொதித்தெழுந்துள்ளனர். இது குறித்து மந்திரி பெசார் அமிருடினிடம் எடுத்துரைத்து நிரந்தர தீர்வு காண்பது இந்துக்களின் உணரவுக்கு மதிப்பளிப்பதாக அமையும் என்று விஜய் ஆனந்த் தெரிவித்தார்.
           இந்த ஆலயம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆலயத்தின் இரண்டு தரப்புகளுக்கு மத்தியில் ஏற்பட்டிருந்த பிரச்சினையில் ஒரு தரப்பு ஆலயத்தை வேறு இடத்திற்குக் கொண்டுச் செல்ல ஒப்புக் கொண்டதால் நீதிமன்றம் வரை வழக்கு கொண்டுச் செல்லப்பட்டு ஆலயத்தை இடமாற்றம்  செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எது எப்படி இருந்தாலும் இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆலயத்தை அதே இடத்தில் நிலைநிறுத்துவதற்கு வழிகோல வேண்டும் என்று குறிப்பிட்ட எம்.ஜி. விஜய் ஆனந்த, இந்த ஆலயத்திற்காக குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கு நன்றி தெரிவித்தார்.
         இந்த ஆலய விவகாரம் தொடர்பில் அக்டோபர் 22 திங்கட்கிழமை காலை மந்திரி பெசார் அலுவலகத்தில் சிறப்பு பேச்சு நடத்தப்படவுள்ளது. இதில் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சிவராசா, ஆலயத்தின் இருதரப்பு நிர்வாகம், மேம்பாட்டு நிறுவனம் ஆகியோருடன் தாமும் கலந்து கொள்ளவிருப்பதால் அனைவரும் அமைதி காக்கும்படி சில தினங்களுக்கு முன் குணராஜ் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments