மலேசிய திரைப்படக் கலைஞர்களை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல மலேசிய இந்திய திரைப்பட இயக்கங்களின் சம்மேளனம் பங்காற்றும்! தலைவர் கவிமாறன் உறுதி

மலேசிய திரைப்படக் கலைஞர்களை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல மலேசிய இந்திய திரைப்பட இயக்கங்களின் சம்மேளனம் பங்காற்றும்!
தலைவர் கவிமாறன் உறுதி

குணாளன் மணியம்

கோலாலம்பூர், அக்.13-
           மலேசியக் கலைஞர்களை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல திரைப்படம் மட்டுமே வழிவகை செய்யும் என்பதால் இந்திய திரைப்பட இயக்கங்களின் சம்மேளனம் (மை ஃபெம்) கலைஞர்களின் நலனுக்காக முக்கியப் பங்காற்றும் என்று அதன் தலைவர் கவிமாறன் கூறினார்.


         கலைத்துறையை பொறுத்தவரையில் திரைப்படம் மட்டுமே கலைஞர்களை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதால் திரைப்படத் துறையைச் சார்ந்த 10 இயக்கங்களின் பங்கேற்பில் தொடங்கப்பட்டுள்ள மலேசிய இந்தியர் திரைப்பட இயக்கங்களின் சம்மேளனம் திரைப்படத் துறையை சார்ந்த கலைஞர்களின் நலனுக்கு முக்கியப் பங்காற்றும் என்று மை மை ஃபெம் அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் கவிமாறன் தெரிவித்தார்.
           மலேசியாவில் கலைஞர்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். அதனை நிவர்த்தி செய்ய முடியவில்லை. கலைஞர்களின் கலைத்துறை குறிப்பாக திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. இதற்கு அவர்களின் திரைப்படம் திரையரங்குகளில் முறையாக திரையேறாததுதான் காரணம். ஒவ்வொரு முறையும் மலேசியத் திரைப்படத்தை பாருங்கள் என்று கெஞ்ச வேண்டியிருக்கிறது. ஆனால், சினிமா படத்தை ஒரு விளம்பரத்தில் கூட்டம் கூட்டமாக பார்க்கச் செல்கின்றனர். அது தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. அது அவர்களின் உரிமை. ஆனால், மலேசியத் திரைப்படத்திற்கு ஆதரவு வழங்குவது நமது கடமை என்று ஒவ்வொரு மலேசியரும் உணர வேண்டும் என்று கவிமாறன் வலியுறுத்தினார்.
           மலேசிய திரைப்படங்களை எப்படி விளம்பரம் செய்தால் அது வெற்றி பெறும் என்ற அணுகுமுறையை மை ஃபெம் ஆராயும். அதேநேரத்தில் மலேசிய திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த மை ஃபெம் நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும் மை ஃபெமில் உறுப்பியம் பெற்றுள்ள திரைப்படம் சார்ந்த துறையைச் சேர்ந்த கலைஞர்களின் பிரச்சினைகளை தங்கள் பார்வைக்கு கொண்டு வரும் பட்சத்தில் அதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகளையும் மை ஃபெம் ஆராயும் என்று கவிமாறன் குறிப்பிட்டார்.
          இந்த மை ஃபெம் அறிமுக நிகழ்வில் மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் சிறப்பு வருகை புரிந்து உரையாற்றினார். மேலும் தகவல்  பல்லூடக அமைச்சர் கோவிந்த் சிங் டியோவின் பிரதிநிதியாக சுரேஷ், ராஜு, கலைஞர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

Comments